tamilnadu

img

செப்.25 சாலை மறியல் தமிழகம் ஸ்தம்பிக்கட்டும்...

வேளாண்மைதுறை சார்ந்த மூன்று சட்டங்களில் உள்ள பாதிப்புகளை விட அதை நிறைவேற்றிய விதம் நாடாளுமன்ற ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகிறது என்றால் பாமரர்கள் அதைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட இனி அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது தான். நாடாளுமன்ற மக்களவையில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மத்திய அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் அவர்கள் ராஜினாமா செய்தார். பத்திரிக்கையாளர்களிடத்தில் அவர் கூறியது, “இந்த சட்டங்கள் குறித்து விவசாய பிரதிநிதிகளை அழைத்து பேசுங்கள் என்று சொன்னேன். அதைக்கூட அமைச்சரவை காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் நான் அங்கிருந்து என்ன செய்வது” என்பதுதான். மத்திய அமைச்சரவை என்ன மாதிரி செயல்படுகிறது என்பதற்கு இது உதாரணம். 

ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி...
செப்டம்பர்-20 அன்று  மாநிலங்களவையில், ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தே அவை துணைத்தலைவர் குரல் வாக்கெடுப்பு நடத்துகிறார். வாக்கெடுப்பு என்றாலே பாஜக அகராதியில் மோசடி, முறைகேடு என்றாகிவிட்டது. ஆம்! அவைத் துணை தலைவர் குனிந்த தலை நிமிராமல் யார் ஆதரித்து குரல் கொடுக்கிறார்கள், யார் எதிராக குரலெழுப்புகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சட்டம் நிறைவேறியது என்று அறிவிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் திகைத்துப் போய்விட்டார்கள். அதாவது, ஆளுங்கட்சி மோசடி செய்தாவது இந்த சட்டத்தை நிறைவேற்றிவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டது என்பதன் வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கை. நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டுமென்ற குறைந்தபட்ச கோரிக்கை கூட அரசால் ஏற்கப்படவில்லை. உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட சிறு திருத்தங்கள் கூட நிராகரிக்கப்பட்டன. எனவே, நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பது ஆகப்பெரும் முன்னுரிமைப் பிரச்சனையாக இன்று உருவெடுத்திருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை சவப்பெட்டியில் வைத்து கடைசிஆணியையும் இறுக்கி அடித்த நிகழ்வு தான் மாநிலங்களவையில் நடைபெற்றுள்ளது. அரசியல் சாசனம் நாடாளுமன்ற அவைகளுக்கும், அவை உறுப்பினர்களுக்கும் வழங்கியுள்ள உரிமைகளை தேவையில்லாத ஆணி என்றே ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது. எனவே, மக்கள் பிரதிநிதிகளாகிய நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை பரிதாபகரமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டிய தருணம் இது. 

பாதிப்பு விவசாயிகளுக்கு மட்டுமல்ல...
வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் ஒப்பந்த பாதுகாப்பு சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களும் வேளாண்துறை சார்ந்தது என்று சொன்னாலும் பாதிக்கப்படப் போவது விவசாயிகள் மட்டுமல்ல! பொது மக்களும் தான். எனவே, இச்சட்டங்களை சமூகத்தின் சகல பிரிவினரும் எதிர்க்க வேண்டியது அவசியம். மற்றொன்று, இந்த மூன்று சட்டங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. பிரிக்க முடியாதவை. அதுதான், அவசரச் சட்டமாக கொண்டு வந்தபோதும், சட்டமாக மாற்றிய போதும் மூன்று சட்டங்களையும்ஏக காலத்தில் வெளியிட்டதற்கான காரணம். 

ராஜாவை விஞ்சிய விசுவாசி
இந்த சட்டங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ராஜாவை விஞ்சிய ராஜவிசுவாசியாக சட்டம் குறித்து பிரதமர்தரப்பில் கூட தராத பல விளக்கங்கள், வியாக்யானங்களையெல்லாம் விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அது எஜமானவிசுவாசத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்களே தவிரஉண்மையல்ல. முதலமைச்சரின் விளக்கங்களுக்கெல்லாம் அந்தக் கட்சியின் மூத்த தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தனது நாடாளுமன்ற உரை மூலம் பதிலளித்து விட்டார். முதலமைச்சர் அவர்கள் முதலில் அவருக்கு விளக்கம் சொல்லட்டும். மற்றொன்று, அரசின் வேளாண் கொள்கைக்கும் விவசாயிகளுக்குமிடையிலான போராட்டத்தை ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிரச்சனையாக மாற்றி ஆளும் தரப்பு திசைதிருப்புகிறது. பிரச்சனையின் மையப்புள்ளியை அழிக்கப் பார்க்கிறது. ஆளும் வர்க்கத்தின் இந்தசூழ்ச்சிக்கு இரையாகக் கூடாது என்பது எமது வேண்டுகோள்.ஏனென்றால் அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

ஏன் எதிர்க்கிறோம்?
இந்த மூன்று சட்டங்களையும் ஏன் எதிர்க்கிறோம்? ஒப்பந்த சாகுபடியை பொறுத்தவரை இந்திய விவசாயிகளுக்கு கசப்பான அனுபவம் தான் ஏற்கனவே உள்ளது. உதாரணத்திற்கு கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலை முதலாளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தான் சாகுபடி  செய்கிறார்கள். இதற்கென்று சட்டமிருக்கிறது. சர்க்கரைகட்டுப்பாட்டுச் சட்டம் 1966. கரும்பிற்கான விலையை மத்தியஅரசு அறிவிக்கிறது. கரும்பு வழங்க வேண்டிய எல்லையை அரசு வரையறுக்கிறது. கரும்பை அனுப்பினால் விவசாயிகளுக்கு பதினைந்து நாட்களுக்குள் ஆலை நிர்வாகம் பணத்தை தர வேண்டும். இல்லையென்றால் எவ்வளவு காலம் கழித்து பணத்தை தருகிறார்களோ அதற்கு வட்டி கொடுக்க வேண்டும் என்பது சட்டம். ஆண்டுதோறும் கரும்பு
பண பாக்கி கேட்டு விவசாயிகள் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் உணவு அமைச்சர் அவர்கள் அளித்த பதிலில் 2019-20ல் மட்டும் நாடு முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் தர வேண்டியபாக்கி 15683 கோடி ரூபாய். தமிழ்நாட்டில் மட்டும் 1834கோடி ரூபாய். 2016-17, 2018-19ம் ஆண்டு பாக்கி தனி.சட்டம் இருக்கிறது. அரசு ஆட்சி செய்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு பணம் தராமல் ஏமாற்றும், இழுத்தடிக்கும் முதலாளிகளின் முடியைக் கூட அரசால் தொட முடியவில்லை. வருவாய் இழப்பீடு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருந்தும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். விவசாயிகள் கரும்பை பயிரிட்டுக் கொடுத்துவிட்டு இலவு காத்த கிளிகளாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டு முதலாளிகளையே இவர்களால் ஒன்றும் செய்ய முடியாத போது பன்னாட்டு முதலாளிகள் மூலம் விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் இந்த ஆட்சியாளர்கள் என்ன செய்து விடுவார்கள்?

இந்த சட்டம், ஒப்பந்தம் செய்து கொள்ள விவசாயிகளை கட்டாயப்படுத்தவில்லையே என்று சிலரால் வியாக்யானம் செய்யப்படுகிறது. உண்மைதான், இதற்கும் ஒரு உதாரணம் உள்ளது. ஜியோ என்றொரு தனியார் செல்பேசி நிறுவனம் வந்தது. பி.எஸ்.என்.எல்லும் இருக்கத்தான் செய்தது. ஜியோ, என்ன செய்தது? ஆறுமாதம் நெட் இலவசம் என்றது, பி.எஸ்.என்.எல்வாடிக்கையாளர்களை வளைத்து போட்டது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததாகக் கூறி பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஊழியர்களை வீட்டிற்கனுப்பியது. இப்போது சொத்தை விற்று உயிர்வாழ வேண்டியநிலைக்கு தள்ளாடிக் கொண்டுள்ளது. ஜியோ இப்போது கட்டணத்தை ஏற்றி அபரிமிதமான லாபத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. யாரும் கட்டாயப்படுத்தவில்லை தான். ஆனால் நமது கண்முன் நடந்த அவலக்காட்சி இது. இனி வாடிக்கையாளர்களுக்கு தனியாரை விட்டால் வேறு வழியில்லை. இதே கதிதான் இந்திய விவசாயத்திற்கும் - விவசாயிகளுக்கும் ஏற்படப் போகிறது. 
எல்லா செலவும் என்னுடையது. ஒப்பந்தத்தில் கையெழுத்து மட்டும் போடு என்பார்கள். அட்வான்ஸ் கூட தருகிறேன்; நல்ல விளைச்சல் வந்தால் ஊக்கத்தொகை உண்டு; கடன் வாங்கி கஷ்டப்பட வேண்டியதில்லை என்றெல்லாம் ஆசைவார்த்தை காண்பிப்பார்கள். அறுவடைக்குப் பிறகுதான் தெரியும். 

அறுபது வருடங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை பாடினாரே, 
“காடு வெளைஞ்சென்ன மச்சான் - நமக்கு
கையும் காலுந்தானே மிச்சம்”
- என்ற நிலை மாறப் போவதில்லை. இந்த நிலையை மாற்ற ஆட்சியாளர்களின் சட்டங்கள் பயன்தருமா?

பன்னாட்டுக் கம்பெனிகள் படையெடுத்தால்...
பன்னாட்டு நிறுவனமான பெப்சி கடந்த ஆண்டு இந்தியவிவசாயிகள் மீது வழக்கு போட்டான் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்டு! என்ன குற்றம்? எங்கள் கம்பெனி உருளைக் கிழங்கை அனுமதியில்லாமல் அந்த விவசாயிகள் பயிரிட்டார்கள் என்பது தான். பரம்பரையாக உருளைக்கிழங்கை பயிரிட்டு வந்த விவசாயிகளுக்கு பன்னாட்டுக் கம்பெனிக்காரன் கொடுத்தது திருட்டுப் பட்டம். இந்த இழிவு தேவையா? பலநூறு பன்னாட்டு கம்பெனிகள் இந்திய விவசாயத்தின் மீது படையெடுத்தால் கட்டியிருக்கும் கோவணமும் களவாடப்பட்டு சிறையிலே சித்ரவதை வேறு அனுபவிக்க வேண்டிவரும். அதனால் தான் விவசாயிகள் வீறுகொண்டு எழுந்துள்ளனர். 

ஒரே நாடு - ஒரே சந்தை - வேளாண் விளைபொருட்களை எந்த மூலைக்கு வேண்டுமானாலும் கொண்டு சென்றுவிற்கலாம்; விவசாயிகளுக்கு விடுதலை; 50 ஆண்டுகளில்கிடைக்காத சுதந்திரத்தை விவசாயிகளுக்கு இந்த சட்டம்வழங்கியிருக்கிறது என்று புளகாங்கிதத்துடன் அறிவிக்கிறார் பிரதமர். பிரதமர் அவர்களே, இப்போதும் மட்டும் என்னதடை இருக்கிறது? விவசாயிகளால் கொண்டு செல்ல முடியவில்லை என்பது தானே உண்மை! ஏதோ தடைகளை தகர்த்த மாவீரர் போல பிதற்றிக் கொண்டிருக்கிறீர்கள். 85 சதவீதம் சிறு-குறு விவசாயிகள். உங்களைப் போல் உலகம் சுற்ற அவர்களுக்கு ஏது நேரம்? அதனால் இந்தபுதிய சட்டத்தால் விவசாயிகளுக்கு கடுகளவும் நன்மை கிடைக்கப் போவதில்லை. இதன்மூலம் சுதந்திரம் பெரு நிறுவனங்களுக்குத்தான் கிடைத்திருக்கிறது. 

வாங்க முடியாதவர்களின் கதி என்ன?
அத்தியாவசியப் பொருட்களும் மக்களுக்கு கிடைக்காமல் செய்வதுதான் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020. உற்பத்தி நடைபெறும். பொருள் இருப்பு இருக்கும். ஆனால் மக்களுக்கு பொருட்கள் கிடைக்காது. ஏனென்றால், பெரும் வர்த்தகர்கள், கம்பெனிகள் எவ்வளவுவேண்டுமானாலும் வாங்கி ‘சேமித்து’ (பதுக்கிஅல்ல) வைக்கலாம் என்று அவர்களுக்கு சுதந்திரம் வழங்கியிருக்கிறது இந்த சட்டம். செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி என்ன விலையாக இருந்தாலும் வாங்கித்தான் தீர வேண்டுமென்ற நிலை உருவான பிறகு கொள்ளை விலைக்கு விற்றுலாபம் பார்ப்பார்கள். வாங்க முடியாதவர்கள் ஏழைகள் பட்டினி கிடந்து சாக நேரிடும். 

“வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்” என்பது கவிதை வரிகளில் மட்டுமே இருக்கும். 

போர்க்களமாக...
இத்தகைய அவலநிலைமைகளுக்கு நாடும் - மக்களும் - விவசாயிகளும் ஆளாகக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுங்கள்; இந்திய விவசாயத்தையும் - விவசாயிகளையும் காப்பாற்றுங்கள் என்று விவசாயிகள் வீதியில் இறங்கி இருக்கிறார்கள். இந்திய நாடு முழுவதும் விவசாயிகளின் எழுச்சிமிக்க போராட்டம் நாட்டு மக்களை கிளர்ந்தெழச் செய்திருக்கிறது. செப்டம்பர்-25 தேசம் முழுவதும் போர்க்களமாக மாற இருக்கிறது. தமிழகமும் அதில் வரலாற்று முத்திரையை பதிக்கும். 

செப்டம்பர்-25 சாலை மறியல் போராட்டத்தில் சமூகத்தின் சகலபிரிவினரும் மாணவர்கள், இளைஞர்கள், மாதர்கள், தொழிலாளிகள், விவசாயத் தொழிலாளர்கள் என எல்லோரும் பங்கேற்க வேண்டும். ஜனநாயகத்துக்கு சாவு மணியடித்த ஆட்சியாளர்களுக்கு, விவசாயிகளுக்கு சவக்குழி தோண்டும் மோடி கூட்டத்திற்கு, இந்த சதிக்கு உடந்தையாக இருந்து விவசாயிகளுக்கு மாபெரும் துரோகம் இழைத்த அதிமுக அரசுக்கு இனி அதிகாரத்தில் தொடர முடியாது என்ற பயத்தை ஏற்படுத்தும் வகையில் சாலைமறியல் போராட்டத்தில் ஆயிரமாயிரமாய் பங்கேற்பீர். கார்ப்பரேட்டுகளின் நலன்களை பாதுகாக்கும் இந்த விவசாயிகள் விரோத சட்டங்களை ஆட்சியாளர்கள் திரும்பப்பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும்.

கட்டுரையாளர் : பெ.சண்முகம், பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

;