tamilnadu

img

கலை இலக்கிய உலகின் மகத்தான போராளி.... தோழர் கருப்பு கருணா  காலமானார்

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே உள்ள வனப்பகுதியில் மரங்களை அகற்றுவதற்கு  எதிராகவும், பவழக்குன்று மலையை பாதுகாக்கவும் மற்றும் பல்வேறு சமூக பிரச்சனைகளில் தொடர்ந்து சமரசமற்ற போராட்டங்களில் ஈடுபட்டுவந்தவரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளருமான கருப்பு கருணா திங்களன்று காலை 10.30 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57.அவருக்கு செல்வி என்ற மனைவியும், சொர்ணமுகி(23) என்ற மகளும், கௌசிகன்(19) என்ற மகனும் உள்ளனர். 

கண்ணீர் அஞ்சலி...
கரையான்செட்டி தெரு, சாரோன், திருக்கோவிலூர் சாலை, திருவண்ணாமலை என்ற விலாசத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருப்பு கருணாவின் உடலுக்கு தமுஎகச மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மாநில பொருளாளர் சு. ராமச்சந்திரன், திரைக் கலைஞர் பூ ராமு, நிலம் இதழ் ஆசிரியர் வாசுகி பாஸ்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவகுமார், செயற்குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர் எம். வீரபத்திரன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தோழர் கருப்பு கருணாவின் உடல் செவ்வாய்கிழமை(டிச.22) காலை 10 மணிக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர். கருணா அவர்களின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது, வேதனை அளிக்கிறது. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.தமுஎகசவின் முழுநேர ஊழியராகவும், பன்முக கலை இலக்கிய செயற்பாட்டாளராகவும் செயல்பட்டவர் தோழர் கருணா . மாணவர், வாலிபர் இயக்கங்களில் இணைந்து செயல்பட்ட அவர், தமுஎகசவின் மாநில தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். திருவண்ணாமலையில் துவங்கிய கலை இலக்கிய இரவு என்ற நிகழ்வு தமிழகம் முழுவதும் பற்றிப் பரவியது. அந்த வடிவத்தை உருவாக்கியவர்களில் கருணா முக்கியமானவர். நாடகம், குறும்படம் என செயல்பட்ட அவர் சமூக ஊடகங்களிலும் முற்போக்கு கருத்துக்களை தொடர்ந்து எழுதி வந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களில் ஒருவராகவும் திகழ்ந்த தோழர் கருணாவின் மறைவு, தமிழக முற்போக்கு கலை இலக்கியத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமுஎகசவினருக்கும், தோழர்களுக்கும் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

;