நமது மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைககளான பண மதிப்புநீக்கம் (Demonetization) மற்றும் சரக்கு, சேவை வரிகள்கா (GST Taxes) ரணமாக நமது நாட்டில் மிகப் பெரிய அளவிலான தொழில் மற்றும் வர்த்தக இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. மறுபறம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தனியாகவும் கூட்டாகவும் வழங்கிய பல பெரு நிறுவன கடன்கள், தனிநபர் கடன்கள் போன்றவை வராக் கடன்களாக (Non Peronming Assets) உருமாறி பல வங்கிகளின் செயல்பாடுகள் முடங்கும் சூழல் நிலவுகிறது. இந்த சூழலில் பல பொது துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் திவாலாகும் போது முதலீட்டாளர்கள் நலன்களை பாதுகாக்க வேண்டிய சூழல் நிலவியது.
சேமிப்புக்கு உத்தரவாதம்
சில முதலீட்டாளர்கள் தங்களது பணத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், முதலீடுகளை தபால் நிலைய சிறு சேமிப்பு மற்றும் நீண்ட நாள் திட்டங்களில் முதலீடு செய்தனர். இவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் திவாலாகும் நிலையும் ஏற்படாது என கருதினர். மறுபுறம் மத்திய அரசும்தனது அறிக்கையில் வங்கியில் முதலீடு செய்த முதலீட்டாளர்களின் பணம் ரூ.1 லட்சம் அளவிற்கு மட்டுமே பாதுகாப்பும், காப்பீடும் இருந்தது என்ற நிலையை மாற்றி ரூ.5 லட்சம் வரை முதலீட்டாளர்களின் பணத்திற்கு பாதுகாப்பு செய்யும் அறிவிப்புகளும் செய்யப்பட்டது. அப்போதைய பஞ்சாப் நேசனல் மற்றும் மராட்டிய கூட்டுறவு வங்கிகள் சில தனிப்பட்ட முதலாளிகள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு வழங்கிய அதிகப்படியான கடன் தொகை மற்றும் வராக் கடன்கள் காரணமாக பல லட்சம் முதலீட்டாளர்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்து மும்பை நகரில் உள்ள ரிசர்வ் வங்கி முன்பு போராட்டம் நடத்திய நிகழ்வுகள் மற்றும் பல செய்தி ஊடகங்களில் இது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டதை தொடர்ந்து முதலீட்டாளர்களின் பணம் ரூ.5 லட்சம் வரை பாதுகாக்கும் வண்ணம் இத்தகைய காப்பீடு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்பாக கடந்த 1993ஆம் ஆண்டில் தான் வங்கி சேமிப்பு காப்பீடு ரூ.1 லட்சம் அளவிற்கு உயர்த்தப்பட்டது.
இருப்பினும் தற்போதைய வங்கிகளில் சுமார் ரூ.120 லட்சம் கோடிகள் அளவிற்கு நிதி மூலதனம் உள்ள நிலையில் நடைமுறையில் உள்ள கடன்கள் ரூ.10 லட்சம் கோடிகள் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள சூழலில் வங்கிகள் இணைப்பை மத்திய அரசு துரிதப்படுத்தியது. இதன் வாயிலாக நமது நாட்டின் மிகப் பெரிய வங்கிக் கட்டமைப்புகளை உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் உண்மையில் வங்கிகளின் மொத்த மூலதனம் மற்றும் வருவாய் அளவுகளில் வராக் கடன்கள் அளவை குறைத்து காட்டி தள்ளுபடி செய்வதும், பல பெரிய முதலாளிகள் மற்றும் பெரு நிறுவனங்களை பாதுகாப்பதே மறைமுக நோக்கம் என்ற குற்றச்சாட்டுகளும் பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டுள்ளது.
அஞ்சலக சேமிப்பு
இத்தகைய நடைமுறைச் சூழலில் நமது நாட்டின் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பு முதலீடுகளுக்கு தபால்துறை சேமிப்புகள் நல்ல வட்டி மற்றும் பாதுகாப்பை வழங்கி வந்தன. பல பொருளாதார பத்திரிகைகள், வணிக ஏடுகள் கூட நமது நாட்டின் பொது மக்களின் சேமிப்புக்கு தபால் துறை முதலீடுகள் நல்ல வாய்ப்பு என்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் வாழ்வுரிமைகள் இதனால் பாதுகாக்கப்படும் என்றும் பல முதலீட்டு பரிந்துரைகள் (Investment recommendations) வழங்கி வந்தன. இத்தகைய நடைமுறை சூழலில் கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் செயல்பாடுகள் இத்தகைய சிறு சேமிப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.
சிறு சேமிப்பு நிதியும், நிதி பற்றாக்குறை சூழலும்
நமது நாட்டில் மத்திய அரசு பின்பற்றிய தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக கடுமையான வருவாய் இழப்புகளை சந்தித்து வருகிறது. இத்தகைய நடைமுறை சூழலில் தனது நிதி பற்றாக்குறையை தீர்க்கும் வண்ணம் தேசிய சிறு சேமிப்பு நிதியில் இருந்து கடன்களை பெற்று தனது நிதி தேவையை சந்தித்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது அரசின் பொதுத்துறை நிறுவனமான “ஏர் இந்தியாவை” தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் அதற்கு தேவைப்படும் நடப்பு மூலதனத்தை (Working Capital) போதிய அளவிற்கு ஒதுக்காமல் தேசிய சிறு சேமிப்பு நிதியிலிருந்து பல ஆயிரம் கோடி கடன் பெற்று நடத்தி வருகிறது.
மறுபுறம் தற்போது விவசாயிகளிடம் வேளாண் விளைப் பொருட்களை குறைந்தபட்ச நிர்ணய விலையில் (Minimum support price) பெற்று சேமித்து வைத்து, பொது வழங்கல் துறை வாயிலாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவும் இந்தியாவின் உணவு நிறுவனம் (Food Corporation of India) கூட போதிய அளவு நிதி வழங்காமல் அதனுடைய நிதி தேவைகளை சந்திக்க ரூ.65 கோடிகள் வரை கடன் பெற்றுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட கடன்களும் மோடி அரசு வாங்கவுள்ள இரண்டு விமானங்கள் - மிக முக்கியமான நபர்களுக்கான - குறிப்பாக நமது பிரதமர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியின் பயணங்களுக்கு என வாங்கப்படவுள்ளதாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மூவர் மட்டும் பயணம் செய்யும் இரண்டு விமானங்களுக்கு சுமார் ரூ.4,469 கோடிகள் தேசிய சேமிப்பு நிதியில் இருந்து பெறப்பட்டுள்ளது என்பது தான் வேதனையபன உண்மை. தொழில் துறைகளில் வீழ்ச்சி தொடர் கதையாகிவிட்ட நடைமுறை சூழலில் இத்தகைய ஆடம்பர செலவுகளுக்கு பொது மக்களின் குறிப்பாக மத்திய வர்த்தகம் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரின் சேமிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய மத்திய அரசின் செயல்பாடுகள் இந்தியாவின் பெருவாரியான மக்கள் தொழில் வீழ்ச்சி, வேலை இழப்புகள், வேலை இல்லா பிரச்சனையால் தவிக்கும் போது, பிரெஞ்சு புரட்சியின் போது ‘மக்களுக்கு ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிடட்டும்’ என்று பிரெஞ்சு அரசி மேரி ஆன்டோ நிட்டி நினைவுபடுத்துவதாக உள்ளது.
மத்திய அரசு அதிகப்படியான கடன்களை சிறு சேமிப்பு திட்ட நிதியிலிருந்து பெற்று வருவதை மத்திய நிதி நிலை அறிக்கைகள் மற்றும் தேசிய சிறு சேமிப்பு அறிக்கைகள் வாயிலாக நாம் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். கடந்த 2014ஆம் ஆண்டு முதலான கடன்கள் மற்றும் அதற்குரிய வட்டிகள் பற்றி தொடர்ச்சியான புள்ளி விபரங்களை காணும்போது நாம் தெரிந்து கொள்ள முடியும்.
தகவல்: மத்திய நிதி நிலை அறிக்கை (Budget Documents)
இவ்வாறு கடந்த சில ஆண்டுகளாக நிதி பற்றாக்குறையை சந்திக்க மத்திய அரசு தொடர்ச்சியாக சிறு சேமிப்பு நிதியில் கடன்களைப் பெற்று நிலைமையை சமாளித்து வருகிறது. இவ்வாறு மத்திய அரசு பெற்றுவரும் கடன்களுக்கான வட்டிகளும் பெருகி வருகிறது.
இவ்வாறு சிறு சேமிப்பு நிதியிலிருந்து அதிகப்படியான கடன்கள் பெற்றும், வட்டியும் செலுத்த வேண்டிய சூழல் மத்திய அரசில் நிலவுகிறது.
இது ஒருபுறமிருக்க, தற்போது நஷ்டத்தில் இயங்கும் பல பொதுத் துறை நிறுவனங்களுக்கு கடன்களை வழங்கியும் உள்ளது. இவற்றில் பலர் பெற்ற கடன்களை மீண்டும் திருப்பி செலுத்த முடியாத சூழலில் உள்ளதால் தற்போது சிறு சேமிப்பு நிதி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக பல பொருளாதார நாளிதழ்கள், வணிக ஏடுகள் தெரிவிக்கின்றன.
வட்டி விகிதங்கள் குறைப்பு
இத்தகைய நடைமுறை சூழலில் மத்திய அரசு வருவாய் குறைந்த பிரிவனர் (Low income groups) மற்றும் மத்திய தரப்பிரிவினர் மாதாந்திரம் அதிக வட்டி மற்றும் பாதுகாப்பு கொண்ட சிறு சேமிப்புகளின் வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. இதன் வாயிலாக அரசு தனது நிதி பற்றாக்குறை சூழலை கருத்தில் கொண்டு மீண்டும் சிறு சேமிப்பு நிதியில் கடன்களை பெறும்போது குறைந்த வட்டியில் கடன்களை பெற முடியும் என்பதே முக்கிய காரணம். இவ்வாறு தனது பொருளாதார தோல்விகளை மறைக்கவும் குறைந்த வட்டியில் கடன்களை பெறவும் தற்போது இந்திய மக்கள் நம்பியுள்ள சிறு சேமிப்பு நிதியின் வட்டியை அரசு குறைத்துள்ளது.
மேலும் கடந்த நிதி நிலை அறிக்கையில் வருமான வரியில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. முன்பு பல சேமிப்புகளுக்கு வரி சலுகைகளை நீக்கியதுடன் வருங்காலங்களில் அனைத்து சேமிப்புகள் மற்றும் காப்பீடுகளுக்கு வரிச் சலுகைகள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில் வருங்காலங்களில் சிறு சேமிப்பு முதலீடுகள் குறையவே செய்யும். இதனால் நமது நாட்டில் நுகர்வுகள் (Consumptions) பெருகி மேலை நாடுகளைப் போல் குறுகிய கால வளர்ச்சி ஏற்படும் என்ற நோக்கில் இத்தகைய பொருளாதார முயற்சிகள் நவீன தாராளமய பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையை பெற்று மேற்கொள்ளப்படுகிறது.
இத்தகைய பொருளாதார முயற்சிகள் மேற்கத்திய நாடுகளில் ஏற்கனவே தோல்வியில் முடிந்தவை. முந்தைய பொருளாதார வீழ்ச்சிகளை இந்தியா திறம்பட சந்தித்து வெற்றி பெற இந்தியர்களிடம் இருந்த சேமிப்பு பழக்கமும், நமது பல சேமிப்பு கட்டமைப்புகள் (Financial Architecture) பொது துறையின் கீழ் இருந்ததும் தான் காரணம் என்ற வரலாற்றை மத்திய அரசு உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் நம்பியுள்ள சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டியை குறைத்தும், இதனை உரிய பாதுகாப்பு இல்லாத முதலீடாக மாற்ற முயற்சி செய்வதும் நமது நாட்டிற்கும், மக்களுக்கும் செய்யும் பெரிய மோசடியாகும்.
கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் இது மிகப்பெரிய தாக்குதலாக எளிய மக்களின் தலையில் இறங்கும் அபாயம் உள்ளது.