tamilnadu

img

தஞ்சாவூர்: மழைநீரில் மூழ்கிய சம்பா நெற்கதிர்கள் முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் கவலை...

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் மூழ்கிய முன்பட்ட சம்பா நெற்கதிர்கள் முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடர் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெல் வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை விவசாயிகள் வடியவைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் வடிகால்கள் முறையாக இல்லாத காரணத்தாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையினாலும் வயல்களில் தண்ணீர் வடிந்து செல்வது காலதாமதமாகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.35 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதில் கடந்த 2-ம் தேதி முதல் பெய்த மழையினால் 1,500 ஹெக்டேரில் முன்பட்ட சம்பா நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. வயல்களில் தண்ணீர் தேங்கிகாணப்படுவதால் நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளது. அதே போல் நெற்கதிர்தாள்களும்(வைக்கோல்) அழுக ஆரம்பித்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். குறிப்பாக தஞ்சாவூர் அருகே வரவுக்கோட்டை, சூரக்கோட்டை, மடிகை, தென்னமநாடு, காட்டூர், வாண்டையார் இருப்பு, வாழமரக்கோட்டை பகுதிகளில் முன்பட்ட சம்பா நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து வாண்டையார்இருப்பு விவசாயி ஆர்.விஜயகுமார் கூறுகையில், முன்பட்ட சம்பா சாகுபடியை செய்த நெற்கதிர்கள்தற்போது அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. தொடர் மழை காரணமாக வயல்களில்தண்ணீர் தேங்கி நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்துவிட்டது. மழைநீர் வடியாததால் தற்போது நெல்மணிகள் பயிராக முளைக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் தண்ணீர் தொடர்ந்து நிற்பதால் தாள்களும் அழுகி வருகிறது. இந்த நெல்லை அறுவடை செய்ய வாய்ப்பு இல்லை. இதனால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரைசெலவு செய்தும் மகசூலை எடுக்க முடியாமல்விவசாயிகள் பெரும் நட்டத்தை அடைந்துள்ளனர். இந்த இழப்பை கருத்தில் கொண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சிறப்பு அலுவலர் ஆய்வு 
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புயல் மழை மீட்பு நிவாரணப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனருமான என்.சுப்பையன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் முன்னிலையில் ஆய்வு நடத்தினார்.

;