tamilnadu

img

மழையால் பதராகி போன நெற்பயிர்கள்... மத்தியக் குழுவிடம் முறையிட்ட தஞ்சை விவசாயிகள்...

தஞ்சாவூர்:
புரெவி புயல் மழை காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள், நடவு செய்யப்பட்ட தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியும், சோளம், நிலக்கடலை என மாவட்டம் முழுவதும் 21,576 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் தொடர் மழை காரணமாக ஆறுகளில்  உடைப்புகள் ஏற்பட்டு மற்றும் சாலைகள் பழுதாகி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

\இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக மத்தியகுழுவினர் வியாழக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய உள்துறை  அமைச்சகஇணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி, மத்திய வேளாண் துறை அமைச்சக இயக்குநர் டாக்டர்மனோகரன் அடங்கிய 8 பேர் கொண்ட குழுவினர்தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே பெரிய கோட்டைக்கு வந்தனர். பெரியகோட்டையில் கண்ணனாறு உடைப்பு ஏற்பட்டு மழைநீர் வயல்களில் புகுந்ததால், அங்கு நடவு செய்யப்பட்ட 11,947 ஏக்கர் பாதிக்கப்பட்டது. இந்த பகுதியை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்டத்தில் புரெவி புயல் பாதிப்புகளை புகைப்படமாக காட்சிப்படுத்தினர். இந்த பாதிப்புகளை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் மத்திய குழுவினரிடம் விளக்கினார். பின்னர் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டனர். இதன்பாதிப்புகளை வேளாண்மை துறை இணை இயக்குநர் ஜஸ்டின் எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் பாதிப்புக்குஉள்ளான நெற்பயிரை மத்திய குழுவினரிடம்காட்டினர். அப்போது விவசாயிகள் இந்தியில் பேசினர். விவசாயிகள் கூறும் போது “மழை காரணமாக கதிர்விடும் பருவத்தில் இருந்த நெல்மணிகள் அனைத்தும் பதராகிபோய்விட்டது. வைக்கோல் மட்டுமே கிடைக்கும். நெல்மணிகள் எதுவும் கிடைக்காது, இதனால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு  செய்துள்ளோம்.எனவே அரசு உரிய இழப்பீடு  எங்களுக்கு வழங்கினால் பேருதவியாக இருக்கும்  என கூறினர்.இந்தியில் விவசாயிகள் பேசியதை மத்தியக்குழுவினர் ஆர்வத்தோடு கேட்டு, அவர்களிடம் எவ்வளவு மழை பெய்தது, நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு உள்ளது என்பது போன்ற விவரங்களை கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒரத்தநாடு அருகே மேலஉளூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்கதிர்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு, விவசாயிகளிடம் பாதிப்புகளை கேட்டறிந்தனர்.

;