தஞ்சாவூர்: அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் ( சிஐடியு) ஆண்டு பேரவைக் கூட்டம் தஞ்சாவூரில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, சின்னையன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் து. கோவிந்தராஜூ, அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் மத்திய சங்க துணைத் தலைவர் பி.வெங்கடேசன், அரசுப் போக்குவரத்துக் கழக குடந்தை மண்டல தலைவர் பி.முருகன், விரைவுப் போக்குவரத்து கழக சிஐடியு பொதுச்செயலாளர் ம.கனகராஜ், ஓய்வு பெற்ற நல அமைப்பு மாநில துணை செயலாளர் சோ. ஞானசேகரன், சுமைப்பணி மாவட்டச் செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய தலைவராக சா.செங்குட்டுவன், செயலாளராக அ.செ.பழனிவேல், பொருளாளராக முருகேசன், துணைத் தலைவராக பரத்ராஜ், துணை செயலாளராக குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தஞ்சை பணிமனையில் 3 வருகைப்பதிவு இருந்தது, தற்போது இரண்டாக குறைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. மீண்டும் மூன்று வருகைப்பதிவு முறையைக் கொண்டு வரவேண்டும். இரட்டிப்பு பணி பார்க்கும்போது, இன்னொரு வருகைப்பதிவு வழங்க வேண்டும். இரட்டிப்பு பணிக்கு மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும். பணமாக பெற்றுக் கொள்ளுமாறு, வற்புறுத்தவோ மிரட்டவோ கூடாது. தஞ்சை பணிமனையில் முன்னணி சங்கமாக இருந்து வரும், சிஐடியு தொழிற்சங்கத்திற்கு என தனியாக அலுவலகம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு விடுப்பு மறுப்பு, பழிவாங்கும் நடவடிக்கை, இரட்டிப்பு பணி பார்க்க வற்புறுத்துவதை கைவிடவேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும்,” ஜனவரி 8 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றி பெறச் செய்வது” எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.