tamilnadu

img

சாப்பிட்டதற்குப் பணம் தர மறுத்து ரகளை - இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

கள்ளக்குறிச்சியில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்ததோடு உணவகத்திற்கு சீல் வைத்து விடுவோம் என்று ரகளையில்  ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரபல தனியார் உணவகத்தில் கடந்த 2-ம் தேதி இரவு இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் சென்று உணவு உண்டுள்ளனர். பின்னர் உணவாக ஊழியர் உணவிற்கான பில்லை கொடுத்திருக்கிறார். 

ஆனால் பில்லை பார்த்தவர்கள், “எங்களுக்கே பில்லா… நாங்கள் யார் தெரியுமா… நாங்கள் எல்லோரும் இந்து முன்னணியின் நிர்வாகிகள். நாங்கள் நினைத்தால் இந்த உணவகத்திற்கு சீல் வைத்துவிடுவோம். எங்களிடம் பில் கேட்ட விஷயம் தெரிய வந்தால்” என்று ரகளை செய்திருக்கிறார்கள். அப்போது “பில் கொடுங்கள் சார் ப்ளீஸ்” என்று உணவாக ஊழியர் மீண்டும் கேட்டிருக்கிறார்

ஆனால் நிர்வாகிகள் “நீங்கள் கொடுத்த சாப்பாடு எதுவும் நல்லாவே இல்லை. எல்லாமே கெட்டுப்போனதுதான். அதனால் பணம் கொடுக்க முடியாது. உங்கள் உணவகத்தைச் சோதனையிட வேண்டும்” என்று கூறிக்கொண்டே சமையல் கூடத்துக்குச் சென்றவர்கள், அங்கிருந்த பொருள்களை தூக்கி வீசியிருக்கின்றனர்.

தொடர்ந்து “உங்கள் உணவகத்திற்கு சீல் வைக்காமல் இருக்கணும்னா எங்களை கவனிக்கனும்” என்று பணமும் கேட்டிருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த உணவக ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அஜய், மோகன் மூவரையும் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.