சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகையில் ஒன்றிய அரசு விளையாடுகிறது என சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவருடைய சமூக வலைதள பதிவில்,
இடதுசாரிகளின் ஆதரவோடு நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டு வந்த சிறுபான்மை மாணவர்களுக்கான பிரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்(pre matric) மற்றும் பெண் குழந்தைகளுக்கான பேகம், ஹஷ்ரத் மஹால் கல்வி உதவித் தொகை இரண்டையும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கிடையாது என்று இந்தாண்டு அறிவித்துவிட்டார்கள்.
இந்நிலையில் 9 - 12 படிக்கும் மாணவர்களுக்கு மேற்கண்ட இரண்டு உதவித் தொகைகளும் வழக்கமாக இந்த காலத்தில் வந்திருக்க வேண்டும். ஆனால், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் விசாரித்த வரையில் ஒருவருக்கு கூட இந்த கல்வி உதவித் தொகை வரவில்லை. இதர மாவட்டங்களிலும் இதுவே நிலைமையாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
ஏற்கனவே மௌலானா அபுல்கலாம் ஆசாத் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் மற்றும் வெளிநாட்டில் பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கும் கடன் தொகைக்கான வட்டி மானியம் ஆகியவற்றையும் ஒன்றிய பாஜக அரசாங்கம் தீய உள்நோக்கத்துடன் நிறுத்தியது நினைவிருக்கலாம்.
இந்த பின்னணியில் தமிழ்நாடு அரசாங்கமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் இந்த உதவித் தொகை இதர மாவட்டங்களுக்கு வந்திருக்கிறதா என்பதை அறிந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி தகுதியான மாணவர்களுக்கு இது கிடைப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.