tamilnadu

img

‘ஏழைகளுக்கு எது கொடுத்தாலும் வயிறு எரியும் மோடி!’

சென்னை, மே 17 - முதலாளிகள் வாங்கிய ரூ. 15 லட்சம் கோடி அளவிற்கான கடனைத் தள்ளுபடி செய்தது உட்பட அவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கும் பிரதமர் மோடி, மகளிர்க்கான இலவசப் பேருந்துப் பயணம் போன்ற ஏழைகளுக்கான இலவசத் திட்டங்களைப் பார்த்து வயிறு எரிவதா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச்  செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கை யில் குறிப்பிட்டிருப்பதாவது:

போலிக் கண்ணீர்
மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மீது மோடியின் கவனம் திரும்பியிருக்கிறது. மாநில அரசுகள் ஏழைகளுக்கு ஏதாவது உதவிகள் செய்தால் உடனடியாக அதை ‘இலவசம்’, ‘ரேவடி கலாச்சாரம்’ என்று எகத்தாளமாக பேசும் நரேந்திர மோடி, இப்போது தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார். இந்த பயணத்தின் காரணமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 50 சதவிகிதம் குறைந்து விட்டதாகவும் கண்ணீர் வடித்திருக்கிறார்.

பொய்யான புலம்பல்
தமிழகத்தில் 2021 முதல் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரு கிறது. கோவிட் காலமான 2021-இல் மெட்ரோ ரயிலில் 2.53 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். 2022-இல் இது 6.09 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். 2023-இம் ஆண்டில் இது 9.11 கோடி யாக மாறியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை. மோடி பொய் பேசியிருக்கிறார். இது ஒருபுறமிருக்க, சென்னைக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி களுக்கு ஒரு நயா பைசா கூட இன்றளவும் ஒதுக்க வில்லை.

கண்ணீர் வராதது ஏன்?
அதே சமயம், 2019 முதல் கார்ப்பரேட் வரியை 8 சதவிகிதம் குறைத்ததன் மூலம் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் பெருமுதலாளிகளுக்கு மோடி  விட்டுக்கொடுத்துள்ளார். இதேபோன்று ஏழைகளின் கல்விக் கடன்களை கூட அடியாள் வைத்து வசூலிக்கும் மோடி பெருமுதலாளிகளின் கடனை 9 ஆண்டுகளில் தள்ளுபடி செய்தது மட்டும் ரூபாய் 14.56 லட்சம் கோடி. அப்போதெல்லாம் அவருக்கு கண்ணீர் வரவில்லை.

அரிசிக்கும் ஜிஎஸ்டி
ரயில் பயணத்தில் முதியோர்களுக்கு இருந்த சலுகையை பறித்து அதில் மகிழ்ந்து கொண்டார். அரிசிக்கும், கோதுமைக்கும் கூட 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்து மகிழ்ச்சியடையும் நரேந்திர மோடி, ஏழைப் பெண்கள், ஆதரவற்றோர், வீட்டு வேலை செய்வோர், கட்டுமானப் பணிக்குச் செல்வோர் என்று வாழ்நிலையில் கடைக்கோடி மக்களுக்கும் பயனளிக்கும் ஒரு திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிதற்றுகிறார். அதானிகளுக்கான அரசாங்கத்தை நடத்தும் நரேந்திர மோடி அன்றாடங் காய்ச்சிகளுக்கான சலுகைகளை பார்த்து வயிறு எரிவதும், எரிச்சல்படுவதும் இயல்புதான் என்றாலும், ஒரு பிரதமர் என்கிற முறையில் அவரது பேச்சு முற்றிலும் கடும் கண்டனத்திற்குரியது.

பயனளிக்கும் இலவசப் பயணம்
தமிழகத்தில் சென்னையில் இரண்டு வழித் தடங்களில் மட்டும் தான் மெட்ரோ இரயில் இயங்கு கிறது. மகளிர் இலவச பேருந்து பயணம் தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் இருக்கிற அனைவருக்கும் பலனளிக்கிறது. இத்திட்டத்தினை விமர்சித்து பெருமுதலாளிகளுக்கான பிரதமராகவே தான் இருப்பதை இதன் மூலம் மோடி மீண்டும் ஒருமுறை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

;