tamilnadu

img

சிவகார்த்திகேயன், அரசு, தமுஎகச, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு நன்றி... ஏழை மாணவி சஹானா நெகிழ்ச்சி

தஞ்சாவூர்:
பேராவூரணியில் மின்சாரம் இல்லாமல், தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து, பிளஸ்-2வில், 524 மதிப்பெண் எடுத்த மாணவி, ‘நீட்’தேர்வுக்கு படிக்க உதவிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், இட ஒதுக்கீட்டால் டாக்டர் படிப்புக்கு இடம் வழங்கிய அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் டெய்லர் கணேசன். இவரது மனைவி சித்ராகூலித்தொழிலாளி. இவர்களது மகள் சஹானா(18), பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், உயிரியல் கணிதவியல் பாடப் பிரிவில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 524 மதிப்பெண் எடுத்தார்.மின்சார வசதி இல்லாமல், சூரிய வெளிச்சத்திலும், பள்ளி அருகே இரவில், தெருவிளக்கு வெளிச்சத்திலும் படித்து வந்தார். கஜாபுயலால் வீடு சேதமடைந்த நிலையிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த நிலையில், நீட் தேர்விற்கு தயாராகி டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார்.இதுகுறித்து கடந்த, 2019 ஏப்ரல் மாதம் தீக்கதிரில் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, தஞ்சாவூர் முன்னாள் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை சஹானாவின் வீட்டிற்கு சொந்த செலவில், சோலார் விளக்கு இரண்டுஅமைத்து, 10 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்தார். எல்ஐசி ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், தமுஎகச சார்பில் உடைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் அப்போது வழங்கப்பட்டன. பேராவூரணியைச் சேர்ந்த கவுதமன் என்பவரும் நீட்தேர்வுக்கு படிப்பதற்கு உதவி செய்து வந் தார். 

இதுகுறித்த செய்தி அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், சஹானாவை தஞ்சையில் உள்ள தனியார் நீட் பயற்சி மையத்தில் கடந்தஒரு ஆண்டாக பயிற்சி பெற உதவி செய்தார்.இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் 273 மார்க் எடுத்து திருச்சி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.இதுகுறித்து மாணவி சஹானா கூறுகையில், “எனது டாக்டர் கனவிற்கு பலரும் உயிர்கொடுத்தனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் உதவியால் டாக்டர் கனவு நனவாகியுள்ளது. மேலும், எனது படிப்புச் செலவுமுழுவதையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அதே சமயம் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என முதல்வர் அறிவித்ததாலும் டாக்டர் கனவுமுழுமையாக நிறைவேறியது. அதற்கு முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனாலும் என்னை முதன்முதலில் வீட்டில் வந்து சந்தித்து உதவி வழங்கிய தமுஎகச, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்உதவியை என்றும் மறக்க இயலாது” என் றார்.

;