tamilnadu

img

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அம்பானி, அதானி பொருட்களை புறக்கணியுங்கள்... டிசம்பர் 14 தமிழகத்தில் சிபிஎம் போராட்டம்....

சென்னை;
விவசாயிகள் விரோத வேளாண்சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் டிசம்பர் 14 அன்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கார்ப்பரேட்கள் அம்பானி, அதானி பொருட்கள்புறக்கணிப்பு இயக்கம் நடத்தப்படு கிறது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மூன்று வேளாண் சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான மின்சார சட்டத் திருத்த மசோதா (2020)-ஐ முற்றாக ரத்து செய்யவேண்டுமென வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டிசம்பர் 8 அன்று நாடுதழுவிய மகத்தான பந்த் போராட்டம் நடைபெற்றது.டிசம்பர் 9 அன்று, 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த போது மத்திய அரசு ஆணவப் போக்கோடு நடந்து கொண்ட காரணத்தினால் விவசாய சங்க கூட்டமைப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த அறைகூவல் விடுத்துள்ளது.டிசம்பர் 14 அன்று, தில்லி மாநகரத்தின் அருகாமையில் இருக்கும் மாநில விவசாயிகள் தில்லியை நோக்கிபுறப்பட வேண்டுமென்றும், அதே தேதியில் இதர மாநிலங்களில் ஆதரவு இயக்கம் நடத்திட வேண்டுமென்றும் அறைகூவல் வந்துள்ளன.

கடும் குளிரிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லி மாநகரத்தை முற்றுகையிட்டு உறுதியாக தொடர்ந்து போராடுகிற போது அப்போராட்டத்தை ஆதரிக்கின்ற அடிப்படையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல வடிவங்களில் இயக்கங்கள் நடத்திட வேண்டுமென விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.தமிழகத்தில் விவசாயிகள் சங்கங்கள் டிசம்பர் 14 ஆம் தேதியன்று காத்திருக்கும் போராட்டத்தை துவக்குகிறார்கள். அகில இந்தியவிவசாய சங்கங்களின் கூட்டமைப் பின் அறைகூவலின் அடிப்படையில் நாடுமுழுவதும் அம்பானி, அதானி பொருட்களை புறக்கணிக்கும்  இயக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் டிசம்பர் 14 ஆம் தேதியன்று ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க், ஜியோ விற்பனை கடைகள் முன்பு ரிலையன்ஸ் பொருட்களை புறக்கணியுங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை அட்டைகள் ஏந்தி பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.

தேசம் காக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து நடக்கக் கூடிய “அதானி, அம்பானி பொருட்களை புறக்கணிக்கும்” இயக்கத் திற்கு ஆதரவு தருமாறு அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறதுஇவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

                      ***********************

சுங்கச்சாவடிகள் முற்றுகைப் போராட்டம்... மத்தியத் தொழிற்சங்கங்கள் கூட்டுமேடையும் ஆதரவு

புதுதில்லி:
சுங்கச்சாவடிகளை அனைவருக்கும் திறந்துவிடுதல் உட்பட,  தீவிரமாகிவரும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் அனைத்துப் போராட்டங்களுக்கும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை தன் முழு ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்வதுடன், வரவிருக்கும் நாட்களில் விவசாயிகள் நடத்தும் அனைத்துப் போராட்டங்களுக்கும் தன் முழு ஒத்துழைப்பையும் நல்கிட வேண்டும் என்றும் தங்கள் கிளைகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விவசாய சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க டிசம்பர் 8 அன்று நடைபெற்ற பாரத் பந்த் மகத்தான வெற்றிபெற்றதை அடுத்து, மத்திய அரசாங்கம் இனியும் இப்போராட்டத்தை வெறும் “பஞ்சாப் பிரச்சனை” என்று கூறிக் கொண்டிருக்க முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஞ்சாப் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இதர மாநிலங்களிலிருந்து வந்துள்ள சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்திருப்பதும் இந்த உண்மையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை மெய்ப்பிக்கிறது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்கிற விவசாயிகள் கோரிக்கைக்கு எதிராக மத்திய அரசு முன் வைத்த சூழ்ச்சிகரமான உத்திகள் அனைத்தும் படுதோல்வி அடைந்துள்ளன.

வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவு, 2020 ஆகியவற்றைத் திரும்பப்பெற வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்றுவரும் விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை தன்முழுமையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்கிறது.மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ள அதே சமயத்தில், தொடர்ந்து தாங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கும் அதேபோன்று ஆதரவினை வழங்கிட வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கங்களும் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணி)யானது,

1.    டிசம்பர் 12 முதல் தில்லி – ஜெய்பூர் தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிடுவது,

2.    டிசம்பர் 12 முதல் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை அனைவருக்கும் இலவசமாகத் திறந்து விடுவது

3.    டிசம்பர் 14 முதல் மாநில/மாவட்ட/உள்ளூர் அளவிலான இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வது

4.    அம்பானி, அதானி ஆகிய கார்ப்பரேட்டுகளின் ஜியோ, ரிலையன்ஸ் மால்கள், அதானி ஃப்ரெஷ் போன்றவற்றைப் புறக்கணிப்பது எனத் திட்டமிட்டுள்ளன.

இப்போராட்டங்கள் அனைத்திற்கும் மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை தன் ஆதரவை முழுமையாக அளிக்கிறது. மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையில் அங்கம் வகித்திடும் சங்கங்கள் அனைத்தும் விவசாய சங்கங்களின் இப்போராட்டங்களில் தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டு ஆதரவு தெரிவித்திட வேண்டும் என்றும் மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)

;