tamilnadu

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் - வேலை வழங்குக....

சென்னை:
கொரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு காலத்தில் வேலை - வருமானமின்றி முடங்கிக் கிடக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமும் - வேலையும் வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி ஜூன் 4ல் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் நாடு முழுவதும் போராட்டத்தை நடத்துகிறது.

இதுகுறித்து  சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:ஊரடங்கு காலம் 70 நாட்களைக் கடந்துள்ளது. கிராமப்புற ஏழைகள் உள்ளிட்ட உழைப்பாளிகளை வீட்டுக்குள் முடங்கி இருக்க அறிவுறுத்திய மத்திய - மாநில ஆட்சியாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் - உதவிடவும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை நிறைவேற்றிடவில்லை. இதனால் அன்றாடம் உழைத்து வாழும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். கொரோனா தொற்றும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போனதால் அது குறித்து இரண்டு மாதங்களாக ஆட்சியாளர்கள் எடுத்த நிலைபாடுகளும் முற்றிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. நன்கு திட்டமிடாமல் எடுத்த முடிவுகளால் பெரும்பாலும் கிராமப்புற, நகர்ப்புற ஏழைகளும் - தொழிலாளர்களும் - புலம்பெயர்ந்தவர்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் சொந்த கிராமங்களுக்கு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் திரும்பியுள்ளனர். ஏற்கனவே கிராமப்புற வேலையின்மை தீவிரமாக இருக்கும் நிலையில், தற்போது மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.இந்த நெருக்கடியான காலத்தைப் பயன்படுத்தி மோடி அரசு தனது அனைத்து மக்கள் விரோத நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை வேகமாக நிறைவேற்றி வருகிறது. நீண்ட நெடிய போராட்டம் - தியாகங்களால் உருவான தொழிலாளர் சட்டங்களை சிதைத்து வருகிறது. தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியில் இருந்து  12 மணிநேரமாக   உயர்த்தி துரோகமிழைத்துள்ளது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசுகள் தொழிலாளர் சட்டங்களை 3 வருடங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளன.

விவசாயிகளின் குத்தகை நிலச்சட்டம், விவசாய உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட சட்டங்களையும் நீர்த்துப் போக வைக்கும் முயற்சிகளை தற்போது மோடி அரசு எடுத்துள் ளது.  கொரோனா பாதிப்பு கால உதவித்தொகுப்பு என்ற பெயரில் தற்போது ரூ. 20 லட்சம் கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதிலும் விவசாயத் தொழிலாளர்களுக்கோ - விவசாயிகளுக்கோ புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கோ எவ்வித உதவியும் செய்யாமல், முற்றிலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கே முழுவதும் போய்ச் சேரும் வகையிலான அறிவிப்புகளை மேற்கொண்டுள்ளது.கணிசமான ஜன்தன் கணக்காளர்களை இருப்பு வங்கி கணக்காளர்களாக மாற்றிவிட்டு மாதத்திற்கு ரூ.500 வீதம் 3 மாதங்களுக்கு வழங்குகிறோம் என்றும், ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு வழக்கமான கூலி உயர்வு (ரூ.20) அறிவித்துவிட்டு கூலியை உயர்த்தி விட்டோம் என்றும் மத்திய ஆட்சியாளர்கள்  தம்பட்டம் அடிக்கும் நிலை தொடர்கிறது.மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.61,500 கோடி ஒதுக்கிவிட்டு அதில் 9500 கோடியை முந்தைய 2019-20ம் ஆண்டு ஊதிய பாக்கியை வழங்கி திட்டப்பயனாளிகள் வயிற்றில் அடித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்பியுள்ளதும், ஏற்கனவே வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு வேலை வழங்கவும் வேலை நாட்களையும் - தினக் கூலியையும் நிதி ஒதுக்கீட்டையும் கூடுதலாக்கினால் மட்டுமே ஓரளவிற்காவது கிராமப்புற மக்கள் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க முடியும்.ஆகவே இயலாத சூழ்நிலையில் ஆக்கப்பூர்வ உதவிகளை மேற்கொள்ள வேண்டி வரும் ஜூன் 4 அன்று நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்தின் கோரிக்கைகள் வருமாறு:

விவசாயக் கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மாதத்திற்கு ரூ.7500 வீதம் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும். ஊரக வேலைத்திட்ட நாட்களை 200 நாட்களாகவும். தினக்கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்திட வேண்டும். திட்டத்திற்கு மேலும் ரூ.1 லட்சம் கோடி மத்திய அரசு ஒதுக்க வேண்டும். பொதுவிநியோக திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா 50 கிலோ அரிசி வழங்க வேண்டும். பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் சட்டங்களை சிதைப்பதை கைவிட வேண்டும்.நிலக்குத்தகைச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். குடிசைகளுக்கும், விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் வழங்கி வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர். பிடிஓ அலுவலகங்கள் முன் நடைபெறும் போராட் டங்களில் திரளான மக்கள் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;