சென்னை:
தொடர் மருத்துவச் சிகிச்சை காரணமாக பரோலில் இருந்துவரும் பேரறிவாளன் டிசம்பர் 7ஆம் தேதி மீண்டும் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கில் சிறைத் துறை சார்பில் பேரறிவாளனுக்கு பரோல் விடுப்பு தர முடியாது எனக் கூறப்பட்டது. ஆனால் இவ்விவகாரத்தில் சிறைத் துறை, தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் விடுப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி பிற்பகல் 1.45 மணி க்கு மூன்று முறையாக 30 நாள்கள் பரோலில் சென்னையில் உள்ள புழல் சிறையிலிருந்து, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.மேலும் பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று காரணமாக தொடர் மருத்துவச் சிகிச்சை பெறவேண்டிய நிலை உள்ளதால், அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் மேலும் இரண்டு வாரங்கள் பரோல் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.அதன்படி கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு நாள்கள் சிகிச்சை பெற்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் டிசம்பர் 7ஆம் தேதி மீண்டும் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட உள்ளார் என சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.