tamilnadu

img

44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

தமிழ்நாட்டில் 2023-24ஆம் கல்வியாண்டில் 44 பொறியியல் கல்லூரிகள் 10 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கையை பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கு பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 28 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெற்றது. இதையடுத்து துணை கலந்தாய்வு மூலம் காலியான இடங்கள் நிரப்பப்பட்டன.

ஒட்டு மொத்தமாக 440 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,60,780 இடங்களில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. மூன்று சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு, 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 84,812ஆக இருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும், 35 கல்லூரிகளில் மிக மிகக் குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியதாவது:

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. மேலும் 35 கல்லூரிகளில் மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது. நாங்கள் இந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களைப் பெற்றிருக்கிறோம்.

இந்த கல்லூரிகளில் தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆய்வில் எங்களுக்குத் திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று அவர் கூறினார்.

;