tamilnadu

img

விசைத்தறித் தொழிலை நலிவடையச் செய்த மோடி அரசுக்கு எதிராக அணிதிரள்வோம்.... சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் அறைகூவல்

பணமதிப்பிழப்பு ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்ற நடவடிக்கைகளால் விசைத்தறித் தொழிலை நலிவடையச்செய்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த மத்திய மோடி அரசுக்கு எதிராக நவம்பர் 26அன்று நடைபெறும் நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தத்தில் விசைத்தறித் தொழிலாளர்கள் அணிதிரள்வோம் என்று தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளனம் (சிஐடியு) அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.சந்திரன் விடுத்துள்ள அறிக்கை:  

மத்திய மோடி அரசு கொரோனா ஊரடங்கு காலத்தில் உழைக்கும் மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை.  வீட்டில் இருக்க வேண்டும், சத்தான உணவுசாப்பிட வேண்டும், கைதட்ட வேண்டும், விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வெற்றுஉபதேசம் மட்டுமே செய்தார். வெளி மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக பல நூறு மைல் கால் நடையாகவே தங்கள் சொந்த ஊர்களுக்குசென்றார்கள். செல்லும் வழியிலேயே பசியாலும், உடல்பாதிப்பாலும், விபத்தாலும்  அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இவர்களை பாதுகாக்க மோடி அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை.

இக்காலத்தில் மோடி அரசு ஏராளமான அடக்குமுறை சட்டங்களை அறிவித்துள்ளது. தொழிலாளர் சட்டங்களை திருத்தி, உரிமைகளை பறித்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் கேட்டு வழங்காத  சிறு தொழில் அமைப்புகளுக்கும் எந்த உதவிகளும் செய்யாத மோடி அரசு பெரு முதலாளிகளை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.ஜவுளி உற்பத்தியில் விசைத்தறி தொழில்பாரம்பரியமான தமிழகத்தில் 7 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் 3 லட்சம் தறியாளர்களும் இதைநம்பி வாழ்ந்து வருகிறார்கள் 20 மாவட்டங்களில் விசைத்தறி தொழில் உள்ள நிலையில் மத்திய மோடி அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு காரணமாக நலிவடைந்து உள்ளது, தொழிலாளர்களுக்கு வேலை குறைந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் இலவச மின்சாரம் 750 யூனிட் கிடைப்பதால் விசைத்தறி தொழில் தட்டு தடுமாறி நடந்து வருகிறது. தற்போது மத்திய மின்சார சட்ட திருத்தம் காரணமாக இலவச மின்சாரம் பறிபோகும் என்பதுடன், மின்சார கட்டணமும் பல மடங்கு அதிகமாகும்.மேலும், நூல் விலை உயர்வு, உற்பத்தியான சரக்குகள் தேக்கம் காரணமாக வேலை இழப்புகள் அதிகமாகி உள்ளன. இதன் காரணமாக தொழிலாளர்கள் வட்டிக்கு கடன் வாங்கி கடனை திருப்பிக்கட்ட முடியாமல் அவமானம் தாங்க முடியாமல் பலர் இக்காலத்தில் தற்கொலை செய்துள்ளனர்.இதற்கெல்லாம் தீர்வு காணாமல்  சாதி மோதல்களையும் - மதப்பிரிவினையையும்- மொழி திணிப்பையும் கொண்டு மக்களை திசை திருப்பும் வேலையில் மத்திய மோடி அரசும், மாநில அதிமுக  அரசும் செய்கிறது.இந்த சூந்நிலையில்தான் மத்திய தொழிற்சங்கங்கள், அடக்குமுறை சட்டங்களை திரும்ப பெறவும், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கி சிறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்க உதவிகள் செய்யவேண்டும். விவசாயி
களை பாதுகாப்பது, 100 நாள் வேலையை 200 நாள் உயர்த்தி ஊதியம் அதிகப்படுத்தவும், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை முடிவை திரும்பபெற வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 26 அன்று நாடுதழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.நிலக்கரி துறையில் மத்திய அரசு டெண்டர்விற்பனை முடிவை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மின்சாரம் தனியாருக்கு என்று உத்தரப்பிரதேச அரசு அறிவிப்பை எதிர்த்து 72 மணிநேரம் வேலை நிறுத்தம் காரணமாக  உத்தரப்பிரதேச பாஜக அரசு தனியார் என்ற உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது. மத்திய அரசின் ஆயுதஉற்பத்தி ஆலைகள் தனியாருக்கு என்ற அறிவிப்பை எதிர்த்து அந்த ஊழியர்கள் போராட்டஅறிவிப்பால் மத்திய அரசு பின் வாங்கியுள்ளது. பாஜக மோடிஅரசின் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தி அடக்குமுறை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி  உழைக்கும் மக்களுக்கான வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க நடைபெறும் நாடுதழுவிய போராட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களும் முழுமையாக பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டுமென தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளனம் அறை கூவி அழைக்கிறது.
 

;