tamilnadu

img

தேசத்தைக் காக்க தேவையான முடிவுகளை எடுப்போம் : ஸ்டாலின்

சென்னை, ஜூன் 4- மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளி வந்த நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40-க்கு 40 இடங்களை முழுமையாக கைப்பற்றியது. இந்நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் கூறுகையில், “கடந்த முறை 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த முறை 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ் நாட்டு மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் இந்த மகத்தான வெற்றியை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டில் அவருக்கு காணிக்கையாக்குகிறோம்” என்றார்.

“பாஜகவின் பண பலம், அதிகார துஷ்பிரயோகம், ஊடக பரப்புரை அனைத்தையும் உடைத்தெறிந்து நாங்கள் (இந்தியா கூட்டணி) பெற்றுள்ள மகத்தான வெள்ளி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக அமைந்துள்ளது, 400 இடங்கள் என்று கூறிய பாஜகவுக்கு ஆட்சியமைக்கப் போதுமான தொகுதிகள் கிடைக்கவில்லை. பாஜகவின் பண பலம் எடுபடவில்லை. பாஜகவின் கனவு பலிக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

“தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காக்க தேவையான அரசியல் செயல்பாடுகளை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும்” என்றும் முதல்வர் கூறினார்.

இன்று தில்லி செல்லும் முதல்வர்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அடுத்த கட்ட பணிகள் குறித்து விரிவாக விவாதித்து ஆலோசனை நடத்துவதற்காக ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டம் ஜூன் 5 அன்று தில்லியில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தில்லி கூட்டத்தில் பங்கேற்க புதன்கிழமை (ஜூன் 5) காலையில் சென்னையில் இருந்து தில்லிக்கு விமானம் மூலம் செல்கிறார்.
 

;