சென்னை:
சென்னையில் மழைநீர் கால்வாய்க்குள் மொபட் விழுந்ததில் தாய்-மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையாளர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்த தனியார் மருத்துவக்கல்லூரி பேராசிரியை கரோலின் பிரிசில்லா, தனது மகள் இவாலினுடன் இருசக்கர வாகனத்தில் சூப்பர் மார்க்கெட் சென்றார்.தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலையில் நொளம்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி மழைநீர் கால்வாய்க்குள் மொபட் விழுந்ததில் தாய்-மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.இதுதொடர்பாக செய்தித்தாளில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார்.பின்னர், இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு? என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர், காஞ்சிபுரம் ஆட்சியர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
இதேபோன்று, காஞ்சிபுரம் களக்காட்டூர் வேளாண் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த சரண்யா என்ற மாற்றுத்திறனாளி பெண், அலுவலகத்தில் கழிப்பறை இல்லாததால் அருகில் உள்ள குடியிருப்பில் இருந்த கழிவறையை பயன்படுத்திய போது மூடப்படாமல் இருந்த கழிவறை தொட்டிக்குள் தவறி விழுந்து பலியானார். வேளாண் அலுவலகத்தில் கழிவறை வசதி இல்லாததே அவரது மரணத்திற்கு காரணம் என குற்றம்சாட்டப் பட்டது.இதுகுறித்து வேளாண்மை துறை இயக்குனர் பதில் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் இரங்கல்
முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-தாய் மகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அவர்கள் மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து உயிரிழந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க ஆணையிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.