tamilnadu

img

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் சசிகாந்த் செந்தில் 5.70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி

திருவள்ளூர், ஜூன் 4- சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மக்களவை (தனி) தொகுதியில்  இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 5 லட்சத்து 70 ஆயிரத்து 566 வாக்குகள்  வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற  இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆவார்.  மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் பதிவான வாக்குகள், பெருமாள்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் செவ்வாயன்று (ஜூன் 4) எண்ணப்பட்டது. தமிழ்நாட்டில் முதல் கட்டத் தேர்தல் ஏப் 19ஆம் தேதி நடைபெற்றது . இதில் திருவள்ளூர் மக்களவை  தொகுதியில் 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர்.  தேர்தலில் மொத்தம் 14 லட்சத்து, 30 ஆயிரத்து 738 வாக்குகள்  பதிவானது.  

 இந்தியா கூட்டணியின் சார்பில், திமுக ஆதரவு பெற்ற காங்கிரஸ்  வேட்பாளர் சசிகாந்த் செந்தில்,  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி, பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மு.ஜெகதீஷ்சுந்தர் மற்றும் சுயேட்சைகள் உட்பட்ட 14 பேர் போட்டியிட்டனர்.இதில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். ஆரம்ப முதலே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஒவ்வொரு சுற்றிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.  

சசிகாந்த் செந்தில் 794608 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 224042 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 223550 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 120620 வாக்குகளும் பெற்றனர்.பாஜக வேட்பாளரை விட சசிகாந்த் செந்தில் 5 லட்சத்து 70 ஆயிரத்து 566 வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றார்.

அவருக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் தலைவர் த.பிரபுசங்கர் சான்றிதழ் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மக்களவை உறுப்பினர் கிரிராஜன் சட்டமன்றத் உறுப்பினர்கள் சா.மு.நாசர் (ஆவடி), டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

;