tamilnadu

img

தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் வெற்றி களிப்பில் திமுக வேட்பாளர்கள்

சென்னை, ஜூன் 4 - தென்சென்னை, மத்தியசென்னை, மக்களவைத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றியின் விளிம்பில் உள்ளனர்.

18வது மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதியுடன் நிறை வடைந்தது. 7 கட்டங்களாக நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது. இந்த வாக்குகள் எண்ணும் பணி செவ்வாயன்று (ஜூன் 4) அன்று நடைபெற்றது.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த ஊழி யர்கள், முகவர்கள் அனைவரும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வேட்பாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தொகுதி வாரியாக நுழைவு வாயில் முன்பு அதற்கான தனி இடத்தில் வைக்கப்பட்டது. 

தென்சென்னை

1957ல் உருவான தென்சென்னை மக்களவைத் தொகுதியில் முதன்முதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து 1962ல் கி.மனோகரன் (திமுக), 1967ல் சி.என்.அண்ணாதுரை (திமுக), 1971ல் முரசொலிமாறன் (திமுக), 1977ல் ஆர்.வெங்கட்ராமன் (காங்கிரஸ்) 1980ல் ஆர்.வெங்கட்ராமன் (காங்கிரஸ்), 1984, 1989 என இருமுறை  வைஜெயந்திமாலா (காங்கிரஸ்), 1991ல் ஆர்.ஸ்ரீதரன் (அதிமுக), 1996ல் முரசொலிமாறன் (திமுக), 1998, 1999, 2004 என மூன்றுமுறை டி.ஆர்.பாலு (திமுக), 2009ல் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் (அதிமுக), 2014ல் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் (அதிமுக), 2019ல் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்த தேர்தலில் திமுக சார்பில் இரண்டா வது முறையாக த.சுமதி (எ) தமிழச்சி தங்க பாண்டியன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் உள்ளிட்டு 42 பேர் போட்டியிட்டனர். தொகுதி யில் உள்ள 20 லட்சத்து 7 ஆயிரத்து 816 வாக்காளர்க ளில் 10 லட்சத்து 96 ஆயிரத்து 26 பேர் வாக்க ளித்தனர். அதாவது 54.17 விழுக்காட்டினர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதி களில் பதிவான வாக்குகள் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 அடுக்கு காவல்துறை பாது காப்புடன் வைக்கப்பட்டிருந்தது. ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தென்சென்னை தொகுதியில் தபால் வாக்குகளை எண்ணுவதற்கு இரண்டு அரங்குகளில் 9 மேசைகள் போடப்பட்டிருந்தது. சிறப்பு பொதுப்பார்வையாளர்கள் முத்தாடா ரவிச்சந்திரா மற்றும் முகம்மது சபிக் முன்னிலை யில், தென்சென்னை தொகுதி தபால் வாக்கு கள் எண்ணிக்கை நடைபெற்றது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 1.20 நிமிடம்  தாமதமாக எண்ணிக்கை தொடங்கியது. பதிவான 4079 தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

அதேசமயம் திட்டமிட்டபடி  மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணும் இடத்தில், செல்லாத வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பதி வான வாக்குகள் 14 மேசைகளில் 19 சுற்று கள் எண்ணப்பட்டது. சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் அதிக பட்சமாக 30 மேசைகள் போடப்பட்டு 23 சுற்றுகள் எண்ணப்பட்டன. சிற்சில வாக்கு எந்திரங்கள் பழுதான நிலையில், பொறியாளர்கள் அவற்றை சரி செய்தனர். அதன்பின் அந்த வாக்கு எந்திரங்கள் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடித்தது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்து வந்தார். 16வது சுற்று முடிவில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 924  வாக்குகள் பெற்று த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் உள்ளார். 2 லட்சத்து 44 ஆயிரத்து 106 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் இரண்டாம் இடத்திலும், ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 135 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் ஜெ,ஜெயவர்த்தன் மூன்றாம் இடத்திலும், 65 ஆயிரம் வாக்குகளுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சு.தமிழ்ச்செல்வி 4வது இடத்திலும் இருந்தனர்.

மத்தியசென்னை

1977ல் உருவான மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் முதன்முதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பா.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1980, 1984 தேர்தல்களில் திமுகவை சேர்ந்த அ.கலா நிதியும், 1989, 1991 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைசேர்ந்த இரா.அன்பரசுவும், 1996, 1998, 1999 தேர்தல்களில் திமுகவை சேர்ந்த முரசொலிமாறனும் வெற்றி பெற்றனர்.

2004, 2009 தேர்தல்களில் திமுகவை சேர்ந்த தயா நிதிமாறனும், 2014ல் அதிமுகவை சேர்ந்த எஸ்.ஆர்.விஜயகுமாரும், 2019 தேர்தலில் 3வது முறையாக தயாநிதிமாறனும் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் திமுக சார்பில் 5வது முறை யாக தயாநிதிமாறன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக அணி சார்பில் தேமுதிகவை சேர்ந்த பி.பார்த்தசாரதி, பாஜகவை சேர்ந்த வினோஜ் உள்ளிட்ட 31 பேர் போட்டியிட்டனர். தொகுதியில் உள்ள 13 லட்சத்து 50 ஆயிரத்து 161 வாக்காளர்களில் 7 லட்சத்து 28 ஆயிரத்து 614 பேர் வாக்களித்தனர். அதாவது 53.96 விழுக்காட்டி னர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய இந்த மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டது. இரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது. கடைசியாக கிடைத்த தகவலின்படி 4 லட்சத்து 4 ஆயிரம் வாக்குகள் பெற்று  தயாநிதிமாறன் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் வினோஜ் ஒரு லட்சத்து 5 ஆயிரம் வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் பி.பார்த்தசாரதி 78 ஆயிரம் வாக்கு களும், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்.கார்த்திகேயன் 34 ஆயிரம் வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
 

;