tamilnadu

img

அறிஞர் தொ.பரமசிவன் மறைவு... மார்க்சிஸ்ட் கட்சி, தமுஎகச இரங்கல்...

சென்னை:
தமிழ் அறிஞர் தொ.பரமசிவன் அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. பண்பாட்டு ஆய்வாளரும், தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவரும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவருமான பேராசிரியர் தொ.பரமசிவன் வியாழனன்று திருநெல்வேலி பாளையங்கோட்டையில் காலமானார். அவருக்கு வயது 70. அறிஞர் தொ.ப. மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழ் அறிஞரும், சிறந்த ஆய்வாளருமான பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அவருடைய முனைவர் பட்ட ஆய்வான “அழகர் கோவில்” குறித்த ஆய்வுதமிழ் இலக்கிய ஆய்வுலகில் ஒரு திருப்புமுனையாகும். மானுடவியல், பண்பாட்டு நோக்கில் தமிழக வரலாற்றை அவர் ஆய்வு செய்து சிறந்த நூல்களை வழங்கியுள்ளார். அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள் உள்ளிட்ட அவரது நூல்கள் தமிழில் பெரும் கவனத்தைப் பெற்றவை. மார்க்சிய,பெரியாரிய நோக்கிலேயே அவர் தன்னுடைய ஆய்வை அமைத்துக் கொண்டார்.கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மூட்டா அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவராக அவர் செயல்பட்டார். ஆசிரியர் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். ஏராளமான ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், தமிழ் வரலாற்றியல் ஆய்வுக்கும்  பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், அவர் வழிவந்த மாணவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

தமுஎகச அஞ்சலி 
அறிஞர் தொ.ப.மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், தொ.ப.வின் ஆய்வு நூல்களையும், அறிவார்ந்த செயல்பாடுகளையும் பரவலாக்குவதே அவருக்குச் செலுத்தப்படும் பொருத்தமான அஞ்சலி எனக் கூறியுள்ளனர். மேலும், அவரது உடலைஅரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

;