tamilnadu

img

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை துவங்கிடுக! -சிபிஎம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை துவங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின்
மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
2015ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தமிழகத்தில் மதுரை அருகே,
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர்
நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இம்மருத்துவமனை 2022ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு படோடோபமாக
வெளியாகி பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் “'நிலம் கையகப்படுத்துதல்'' உட்பட
பல அடிப்படை வேலைகள் எதுவும் துவங்காமல் வெறும் வெற்று அறிவிப்பாகவே
உள்ளது. தென்மாவட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு பலன் தரும் எய்ம்ஸ்
மருத்துவமனையை அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு எந்த
அக்கறையும் இல்லை என்பதாலேயே மேற்கண்ட பணிகள் துவங்கப்படாமல்
உள்ளது என்பதை சிபிஐ (எம்) மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது.
எனவே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை
உடனடியாக துவங்கிட வேண்டுமெனவும், ஏற்கனவே திட்டமிட்டப்படி 2022ம்
ஆண்டிற்குள் கட்டி முடித்து மக்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு
மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதமளிக்க வேண்டுமெனவும் சிபிஐ (எம்)
மாநிலக்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

;