tamilnadu

img

லண்டனிலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா...

சென்னை:
 லண்டனிலிருந்து தில்லி வழியே சென்னை வந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதை மாநில சுகாதார முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. திங்களன்று (டிச. 21) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச. 22) காலை துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் லண்டனில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும், சென்னை விமான நிலையத்திலேயே நிறுத்தி, மருத்துவ பரிசோதனை நடத்திவிட்டு, 14 நாட்கள் அரசின் சார்பில் தனிமைப்படுத்த அனுப்பி வைத்தனர்.இதற்கிடையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இங்கிலாந்தில் பரவிவரும் கொரோனாவால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை” என்றார்.
லண்டனிலிருந்து இந்தியா வரும் அனைத்து விமானங்களும் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளில் இருந்து விமானங்களில் வருவோருக்கு சோதனை செய்யப்படுகிறது. முகக்கவசம், தனி மனித இடைவெளி தான் கொரோனாவுக்கு தீர்வு. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 14 நாட்கள் தனிமை கட்டாயம் என்றும் அவர் கூறினார்.

14 நாட்கள் தனிமைப்படுத்தலை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த 8 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. தற்போது கிண்டியிலுள்ள கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.இந்தியாவின் பிற நகரங்களில் இருந்து விமானத்தில் வருவோருக்கும் சோதனை நடத்தப்படும். கடந்த 10 நாட்களில் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களையும் பரிசோதிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

;