சங்கப் பாடல்களின் நயமும் நவீன மும் எனும் உள்ளார்ந்த அம்சத்தை மையமாகக் கொண்டு யுக பாரதியின் 26 ஆவது நூலாக ‘மேல் கணக்கு’ வந்துள்ளது பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் என்ற சங்க இலக்கிய கடலுக்குள் விழுந்து முத்துக்களை கொண்டு வந்து சேர்த்தது போல் இருக்கிறது என்கிறார் நூலாசிரியர். யுக பாரதியின் இக்கூற்று மிகையல்ல.
தொடரும் பண்பாட்டு பாரம்பரியம்..
தமிழ்நாட்டில் சங்க இலக்கியம் குறித்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து எண்ணற்ற புத்தகங்கள் எழுதப்பட்டு கொண்டே இருக்கின்றன. சங்க இலக்கியத்தின் அறிவு பாரம்பரியம் இன்னும் சம காலத்தில் பாவலர் அறிவுமதி, சாலமன் பாப்பையா, ஆர்.பாலகிருஷ்ணன்.ஐஏஎஸ், சு.வெங்கடேசன்,சக்தி ஜோதி, ரேவதி ராம் என தொடர்கிறது.
கவிதை, கட்டுரை, கதை, நாவல் என எந்த வடிவத்திற்கும் ஆழமான பொருட் செல்வத்தை அள்ளித் தரும் புதையலாக இருந்து வருகிறது.
சில புத்தகங்களை வாங்கியவுடன் வாசிக்கத் தோன்றுவது இயல்பு.
அப்படி வாசிக்கும் எல்லா புத்தகங்களும் மனதிற்கு நெருக்கமாக அமைவதில்லை. ஆனால் யுக பாரதியின் மேல் கணக்கு வாசித்த பின் ஏற்படுத்திய கருத்தியல் செறிவும், அதில் கிட்டும் ஒளிமய மான பார்வையும் புதியதொரு அனு பவத்தை நினைவில் நீர் அலையாக அடித்துக் கொண்டே இருக்கிறது.
காலடித் தடம்...
இத்தொகுப்பில் யானை, வண்ணத்துப் பூச்சி, உப்பு, பசி, காதல், கனவு, நண்டு கள், சொற்கள், மரம், பறவை, நீர் என 11 கட்டுரையாக தொகுப்பு விரிகிறது.
இக்கட்டுரையில் உள்ள மொழிநடை, எடுத்துக் கொள்ளும் சொல், அதற்கு சங்க இலக்கியம் காட்டும் அறநெறி, அதற்கேற்ப பொருட் செறிவும், அழமும் கொண்ட கவிதைகள், கதைகள் , நாவல், ஜென் ஹைக்கூ, புத்தர், சித்தர், திரைப்படப் பாடல் என விரிந்து சிந்தனைக்கு விருந்து ஆகிறது.
ஒவ்வொரு கட்டுரையும் தன்னகத்தே ஆழ்ந்த பொருளைக் கொண்டுள்ளது. அத்தோடு வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அப்பொருளை கடத்துகின்ற ஆற்றலை பெற்றுள்ளார் யுகபாரதி .
இக்கட்டுரை தொகுப்பை ஒட்டுமொத்தமாக வாசிக்கும் போது சங்க காலசமூ கத்தின் அறம், காதல், வீரம், இயற்கை யுடன் இயைந்த வாழ்வு ஆகியவற்றை மனதிற்குள் கொண்டு வந்து நிறுத்துகிறது.
இக்கட்டுரைகளில் ஏழு கட்டுரைகள் பூமிப்பந்தில் சக உயிரினங்களை தலைப்பு கள் ஆகவும், நான்கு கட்டுரைகள் உணர்வுகளை சூட்டும் சொற்களை கொண்டும் அமைந்துள்ளது.
சங்க இலக்கியம் அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களை பற்றி மட்டுமல்ல. சக உயி ரினங்கள் அனைத்தையும் பற்றி விரி வாகவே பதிவு செய்துள்ளது.
சங்க காலத்தில் இயற்கைக்கு முன்னுரிமை அளிப்பது என எடுத்துக் கொள்ளலாம் என்றே உரைக்கிறது.
மொழி வளம்...
“சொல்வலை வேட்டுவன்”
என்ற தலைப்பு சற்றே வித்தியாசமானது. வேட்டையை தொழிலாகக் கொண்டவனே வேட்டுவன்.
தலைவியை சொல்லால் மயக்கிய வனை சொல்வலை வேட்டுவன் என்கிறார் மாற்பித்தியார்.
யானையை களிறு என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், சங்க இலக்கியத்தில் யானையை குறிக்க வேழம், கரி, புழைக்கை, கைம்மா, குஞ்சரம் பூட்கை, கறையடி, தூங்கல், மருண்மா என 38 சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.இதன் முலம் சங்க இலக்கியத்தின் மொழி வளம் ஆழமானது.
இத்தொகுப்பில் சங்க இலக்கிய உரை யாசிரியர்கள், இல்லாத மானை (கவரிமான்) கூட எப்படி உருவாக்கினார்கள் என்ப தை குறிப்பிட்டு அதில் உள்ள சில சறுக்கல் களை சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார்.
சங்க இலக்கியங்களில் அறம்...
யுகபாரதி எடுத்துக் கொள்ளும் தலைப் பிற்கான அறத்தையும் ஆழமான அம்சத்தையும் உள்ளார்ந்த உணர்வு களையும் பிரம்மாண்டமான கருத்தியல் நுட்பங்களை எடுத்து வைத்துஊடாடுகிறார்.
உதாரணமாக ஊர் பசியும் ஒரு பிடிச் சோறும் எனும் தலைப்பில் உள்ள கட்டுரை மிகுந்த கவனத்திற்குரியது.
முதல் மூன்று கட்டுரைகளை பற்றியும் தன்னுடைய முன்னுரையில் சங்க இலக்கிய கடல் ஆர். பாலகிருஷ்ணன் முன்னுரையில் விரிவாக எடுத்துரைத்துள்ளார். அவர் முன்னுரையே நம்முடைய பார்வையை விசாலப்படுத்துகிறது.
பசியை தாங்கிக் கொள்வது பெரிய ஆற்றல் என்றாலும் அதைவிட பெரிய ஆற்றல் மற்றவரின் பசியை ஆற்றுவதே என்கிறார் வள்ளுவர். சங்க இலக்கிய புறநானூற்றில் வரும் “உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே” எனும் வரிகள் “நெடுநாள் வாழும் அமிர்தத்தை இந்திரர்கள் வழங்கினாலுமே கூட அதை தனித்து உண்ணாதவர்களால் தாம் இந்த உலகம் வாழ்கிறது” இளம் பெருவழுதி.
இத்தகைய அறக்கருத்தியல் அம்சங்கள் கட்டுரைகளின் உள்ளார்ந்த அம்சமாக அமைவது சாலச்சிறந்தது ஆகும். சங்க இலக்கியத்தைப் போல அன்பை யும் காதலையும் அள்ளி நிறைத்த இலக்கியம் வேறொன்று இல்லை என்றே நினைக்கிறேன் என்ற யுக பாரதியின் வார்த்தைகள் நிதர்சனமானது. இன்னும் தமிழ் சிறக்க யுகபாரதியின் படைப்பு பணி மேலும் சிறக்கட்டும். யுகபாரதியின் மேல் கணக்கு நமது உயர்ந்த சிந்தனையின் உயர் கணக்காகும்.
மேல் கணக்கு
(பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும்)
நூலாசிரியர் : யுகபாரதி
வெளியீடு : நேர் நிரை பதிப்பகம்
விலை ரூ.250/-
“பழங்குடி மக்களின் அறப்போராளி ஸ்டான் சாமி” எம்.ஜே. பிரபாகர்
ஒன்றிய பாஜக அரசால் நிறுவன படுகொலை செய்யப்பட்ட ஸ்டான்சாமியின் மூன்றாவது நினைவு தினம் 05.07.2024 ‘தேசிய வளர்ச்சி’ என்ற பெயரில் ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வரும் லட்சக்கணக்கான ஆதிவாசி பழங்குடி மக்களை தங்களது நிலங்களில் இருந்தும் வாழ்விடங்களிலிருந்தும் அப்புறப்படுத்துவதை கையாண்டது ஒன்றிய பாஜக அரசு. ஆதிவாசிகளை ஆதார வளங்கள் அற்றவர்கள் ஆக்கியது. வீடற்றவர் களாக ஆக்கியது; மிக மோசமான வறுமைக்கு தள்ளியது ஒன்றிய அரசு.
ஆதிவாசிகளின் ஆதார வளங்களை, வாழ்விடங்களை, பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தது எதிர்த்து நின்றவர்கள் காவல்துறையினரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். வனத்துறை மூலம் பொய் வழக்கு போட்டு சிக்கலை உருவாக்கினார்கள்.
ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்களை நக்சல்கள் என்று முத்திரை குத்தியது பாதுகாப்பு படைகள். அம்மக்களை கொடூரமாக கொன்ற தோடு பாலியல் வன்புணர்வுகள் செய்வதையும் தொடர்ந்து செய்து வந்தார்கள். கருத்துரிமைகள் மீதும், மனித உரிமைகள் மீதும், மனித கண்ணியம் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்ட அருட்தந்தை ஸ்டான் சாமி, ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக 1980 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்பட்டு அவர்களின் உரிமைக்காக போராடி வந்தார்.
ஆதிவாசி பழங்குடியின மக்கள் விடுதலை யைத் தேடி வெளி உலகத்திற்கு வந்தனர். சமூக மாற்றத்திற்கான மார்க்சியத்தையும் இறை யியலையும் இணைத்து ஒரு விவாதத்தை தொடங்கினார் அருட்தந்தை ஸ்டான் சாமி. ஸ்டான் சாமியின் செயல்பாடுகள் அரசுக்கும் இந்துத்துவா சித்தாந்தவாதிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.
வனத்துறையும், காவல்துறையும் ஆதிவாசி மக்கள் மீது நடத்திய மனித உரிமை மீறல் சம்பவங்களை எதிர்த்து போராடியதோடு, சட்ட பூர்வமான, ஜனநாயக பூர்வமான தலையீடுகள் செய்தார் ஸ்டான் சாமி. நீதிமன்றங்களிலும் அதிகார அமைப்புகளிலும் ஆதிவாசிகளுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்த தோடு ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து கட்டுரை எழுதி வந்தார் ஸ்டான் சாமி. நீதியின் மீதும் நல்லிணக்கம் மீதும் அசை யாத நம்பிக்கை கொண்டிருந்தார் அருட்தந்தை ஸ்டான் சாமி. ஆனால் அரசு அருட் தந்தையை மாவோயிஸ்ட், நக்சல்வாதி என முத்திரை குத்தியது.
கருத்துச் சுதந்திரத்துக் கான அடிப்படை உரிமை கள், ஆதிவாசிகளின் அர சியல் சாசன உரிமைகள், சட்டரீதியான பாரம்பரிய உரிமைகள் போன்றவற்றிற் காக தொடர்ந்து போராடிய போராளி அருள்தந்தை ஸ்டான் சாமி மீது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்ட(UAPA)த்தின் கீழ் கைது செய்து 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி சிறையில் அடைத்தது ஒன்றிய அரசு.
அருட்தந்தையின் மருத்துவக் கோரிக்கையை நீதிமன்றமும் புறக்கணித்தது. என் ஐ எ அமைப்பும் மருத்துவ சிகிச்சைக்கு மறுப்புத் தெரி வித்தது. உடல்நிலை மிகவும் மோசமானதால் 2021 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிற்பகல் ஒரு மணி 1:30 மணிக்கு அருட்தந்தை ஸ்டான்டசாமி கால மானார்.
சிறைச்சாலைகளில் கொடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அனைவரும் கண்டித்து பெரும் போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தினர். இது ஒன்றிய அரசு செய்த ஒரு நிறுவன படுகொலையாகும்.
இந்த நூலினை இந்திய சமூகவியல் நிறு வனத்தின் இயக்குனர் டாக்டர் பிரகாஷ் ப்ளீஸ் ஆங்கிலத்தில் எழுதி உள்ளார். இந்த நூல் பழங்குடி ஆதிவாசி மக்கள் சந்தித்த பிரச்சனைகளை அலசியதோடு இன்றைய தலைமுறையினருக்கு அருமையாக காட்சிப் படுத்தியுள்ளனர்.
பிரச்சனையின் வரலாற்று வேர்களையும் அலசி ஆராய்ந்து உள்ளனர். அருட்தந்தையின் கைதும் மரணமும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் ஆதரவுகள், இந்துத்துவ அமைப்புகளின் தாக்கு தல்களும் பதிலடியும் இது போன்ற ஏராளமான தகவல்களை பதிவு செய்துள்ளனர்.
இன்றைய இளைஞர்கள் அவசியம் இந்நூலினை வாசித் தறிய வேண்டும் இந்நூலினை தமிழில் பதிப்பித்து ள்ள சவுத் விஷன் புக்ஸ் நிறுவனத்தாருக்கு மிகுந்த நன்றியும் பாராட்டுக்களும்.
“ஸ்டான் சாமி”
(பழங்குடி மக்களின் அறப்போராளி)
நூலாசிரியர் : டாக்டர் பிரகாஷ் லூயிஸ்
வெளியீடு: சவுத் விசன் புக்ஸ்
விலை : ரூபாய் 300/-
தொடர்பு எண்: 9445318520