tamilnadu

img

‘ஏர் கலப்பை’ பேரணி: காங். வேண்டுகோள்...

சென்னை:
ஏர்கலப்பை பேரணிகளை காங்கிரசார் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காகக் கூட்டுவோம், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, கடந்த 6 ஆண்டுகளாகக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.அதற்கு மாறாக, விவசாயிகளின் எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்குகிற வகையில் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது.பாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங் களை எதிர்த்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, பலகட்ட போராட்டங்களைத் தமிழக காங்கிரஸ் நடத்தி வருகிறது.தமிழகத்தில் மாவட்ட, வட்டார, நகர, பேரூர், ஊராட்சிகள் உள்ளடக்கிய மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி திருவண்ணாமலையில் விவசாய விரோதச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் என்ற மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தினோம்.விவசாய விரோதச் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெறுகிற வரை தொடர்ந்து போராடுவதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது.வருகிற நவம்பர் 22ஆம் தேதி கோயம் புத்தூரில் மாபெரும் ஏர் கலப்பை பேரணியை நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இன்னாள் முன்னாள் உறுப்பினர்கள், காங்கிரஸ் முன்னோடிகளுடன் நானும் பங்கேற்க இருக்கிறேன். பெருந்திரளாக விவசாயிகளும் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில், நவம்பர் 28 ஆம் தேதி மாவட்டக் காங்கிரஸ் கமிட்டிகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஏர் கலப்பைப் பேரணி நடத்த வேண்டும். கள்ளக்குறிச்சியில் நடைபெறும் ஏர் கலப்பைப் பேரணியில் நான் பங்கேற்க இருக்கிறேன்.அதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு சேலத்திலும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டிலும், சு. திருநாவுக்கரசர் திருச்சியிலும் பங்கேற்க இருக்கிறார்கள்.இதைத் தொடர்ந்து, நவம்பர் மாதத் திற்குள்ளாக தங்கள் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி எல்லைக்குட்பட்ட எஞ்சியுள்ள மற்ற சட்டமன்றத் தொகுதிகளிலும் ஏர் கலப்பைப் பேரணி நடத்தி முடிக்க வேண்டும்.மூத்த காங்கிரஸ் தலைவர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.தமிழக காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணிப் பங்கு வகிக்கிறது என்கிற உணர்வை ஏற்படுத்துகிற வகையில் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்த வேண்டுமென, மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;