tamilnadu

img

‘கலவைமுறை ’ மருத்துவத்தை கைவிடுக... மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் வலியுறுத்தல்

சென்னை:
‘கலவைமுறை ’மருத்துவத்தை கைவிட வேண்டும் என்று மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் எஸ்.காசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:‘‘ஆயுர்வேத மருத்துவர்கள் கண் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிறப்பு
அறுவைசிகிச்சைகளையும் செய்யலாம்” என்ற இந்திய மருத்துவ மத்தியக் கவுன்சிலின் பரிந்துரை கடந்த 19.11.2020 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிவிக்கையை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association) பல்வேறு நவீன அறிவியல் மருத்துவசங்கங்களுடன் இணைந்து  11.12.2020 அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்தத்தை நடத்தியது. (அவசர சிகிச்சை மற்றும் கோவிட்’19 சிகிச்சைகள் தவிர்த்து). இந்த வேலை நிறுத்தத்தை மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் ஆதரித்து முழுமையாகப் பங்கேற்றது.தேசிய கல்விக்கொள்கை 2020, ‘’ஆயுஷ்’’என்றழைக்கப்படும் ‘இந்திய மருத்துவ முறைகளை ‘’அலோபதி’’ என்றழைக்கப்படும் நவீன அறிவியல் மருத்துவத்துடன் இணைத்து ‘’கலவை’’ மருத்துவமுறையை (MIXOPATHY) உருவாக்கவேண்டும்’ என்று வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையில் ‘’நிதிஆயோக்’’ அமைத்த துணைக்குழு கி.பி.2030க்குள் இந்தக் கலவை முறையை (MIXOPATHY) நடைமுறைப்படுத்துமாறு ‘’ஆயுஷ்” மற்றும் “மக்கள் நல்வாழ்வுத்துறை” அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில், இந்திய மருத்துவ மத்தியக் கவுன்சில் (Central Council of Indian Medicine) இந்த அறிவிக்கையைவெளியிட்டுள்ளது.அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிகளை உள்வாங்கிக்கொண்டு, “நவீன அறிவியல் மருத்துவம்” முன்னேறி வந்துள்ளது.

“தடுப்பூசிகள் மற்றும் ‘’ஆன்டிபயாட்டிக்குகளை’’க் கண்டுபிடித்து மனிதகுலத்தைக் காப்பாற்றுவதில் பெரும்பங்காற்றியிருக்கிறது. தற்போதுள்ள ‘’கோவிட் 19”பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதிலும் இது வெளிப்பட்டுவருகிறது. துரதிருஷ்ட வசமாக ‘’கார்ப்பரேட்’’ மற்றும் பன்னாட்டுமருந்து நிறுவனங்களின் ‘சந்தைப்படுத்து தலாலும்’, இந்திய அரசின் தவறான சுகாதாரக் கொள்கையாலும் நவீன மருத்துவத்தின் முழுப்பயன்கள் பெரும்பான்மை மக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை, அதனால் எளிதாகவும், மலிவாகவும் கிடைப்பதால் இந்திய மருத்துவ முறைகளை மக்கள் நாடுகின்றனர்.இந்திய மருத்துவ முறைகளைப் போதிய நிதி ஆதாரம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியுடன் கூடிய வளர்ச்சியை உறுதிப்படுத்துவதன் மூலம், அவற்றின் தனித்தன்மையைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும். மாறாக, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் நடவடிக்கைகள், நவீன மருத்துவத்தை சீர்குலைப்பதுடன், இந்திய மருத்துவமுறைகளை நாளடைவில் முற்றாக அழித்துவிடும். மேலும்  பணம் படைத்தோர் “நவீன மருத்துவ கார்ப்பரேட்’’ மருத்துவமனைக்கு செல்லும் போது, ஏழை எளிய மக்கள் இத்தகைய ‘கலவை’ மருத்துவத்தை நம்பியிருக்கவேண்டியிருக்கும்.

போதிய மருத்துவ அறிவியல் ஞானமும், தேவையான பயிற்சியும் இல்லாமல் உருவாகும், “ஆயுர்வேத மருத்துவர்கள்” முழுமையற்ற மருத்துவர்களாகவே இருப்பார்கள்; மருத்துவ ரீதியாக மிகுந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி செய்ய வேண்டிய அறுவைசிகிச்சை முறைகளை - நவீன மயக்கவியல் அறிவோ அல்லது ஆண்டிபயாட்டிக் போன்ற மருந்துகளின் பயன்பாடோ தெரியாமல், அறுவை சிகிச்சை செய்வது மனிதஉயிர்களோடு விளையாடுவது போன்றது. அதிக அளவில் பின்விளைவுகள் (Complication) ஏற்பட வாய்ப்புள்ளதால், நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

மேலும் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் முதல் பல்வேறு உயர்நீதிமன்றங்கள் வரை, மருத்துவர்கள்  தான் பயின்ற மருத்துவமுறையை மட்டுமே பின்பற்றி சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், தான் படிக்காத - பயிற்சி பெறாத மருத்துவமுறை களை பின்பற்றினால், அது தண்டனைக்குறிய குற்றம் என்று தீர்ப்பளித்திருக்கின்றன.எனவே மத்திய அரசு இதுபோன்ற ‘கலவைமுறை’ மருத்துவத்திட்டத்தை உடனடியாகக் கைவிடவேண்டும், நவீன அறிவியல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் தனித்துவத்தைப் பாதுகாத்து - போதிய நிதியளித்து, ஊக்கப்படுத்தி - வளர்க்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அரசுமருத்துவக்கல்லூரிகளையும், மருத்துவ மனைகளையும் உருவாக்கிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;