tamilnadu

ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் வரும் அபூர்வ நிகழ்வு : ஜூன் 3இல் பார்க்கலாம்

சென்னை, மே 30- சூரியக் குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என்ற 8 கோள்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. இதில் பூமி  ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. அதேபோல, ஒவ்வொரு கோளுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஆகின்றன. அவ்வாறு சுற்றிவரும் போது, கோள்கள் ஒன்றையொன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுகின்றன.

நமது சூரியப் பாதையில் ஒவ்வொரு கோளும் வெவ்வேறு (பல நூறு கோடி கிலோமீட்டர்) தூரத்திலும், வெவ்வேறு சாய்வு கோணத்திலும் சுற்றி வருவதால் அவை எப்போதும் ஒரே நேர்கோட்டில் அணிவகுப்பதற்கு வாய்ப்பில்லை. மாறாக பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல தெரியும். அது எப்போதாவது நடக்கும். அவ்வாறு ஒரே வரிசையில் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து வருவது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

6 கோள்கள்

அந்த வகையில் தான், ஜூன் 3 அன்று, கிழக்குத் திசையில் சூரிய உத யத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அடி வானில், வியாழன் (ஜூபிடர்), புதன் (மெர்குரி), யுரேனஸ், செவ்வாய் (மார்ஸ்), நெப்டியூன், சனி என்ற வரிசையில், 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வர உள்ளன. இதனை பூமியில் இருந்து பார்க்கலாம். 

இதில் யுரேனஸ், நெப்டியூன், புதன் சற்று தூரமாக இருப்பதால் அதை பார்ப்பது கடினம். எனினும், வானம் தெளிவாக இருந்தால் கடற்கரை பகுதிகளில் இவற்றைக் காணலாம். மீதமுள்ளவற்றை பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்க லாம். இதை காற்று மற்றும் ஒலி மாசுபாடு இல்லாத, அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது.

செவ்வாய், சனி வெறும் கண்ணுக்கு மங்கலாக தெரியும். ஜூன் 3 அன்று சனிக் கோளுக்கு கீழேயும், 4-ஆம் தேதி செவ்வாய் கோளுக்கு கீழேயும் பிறைச் சந்திரனையும் காணலாம். இவை கண்ணுக்கு விருந்தாக அமையும்.

அரிதான ஐந்து கோள்கள்...

இதேபோல 5-க்கும் மேற்பட்ட கோள்கள் வரும் ஆகஸ்ட் 28 அன்றும், 2025  ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்ட் 29 ஆகிய தேதிகளிலும் தெரியும் என்று சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ் கவண் தெரிவித்துள்ளார்.

அண்மையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் நகர்ந்து சென்ற தை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெறும் கண்களால் பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது. 
 

;