tamilnadu

img

‘கலகத்தில்’ சிக்கிய அதிமுக தலைமைக் கழகம்

அதிமுக அலுவலகத்தில் ஞாயிறு (மார்ச் 17) இரவு நடந்த மோதலுக்குக் காரணம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் தான் என்று அதிமுக வட்டாரத்தில் குமுறலாய்ச் சொல்கிறார்கள். இதுதொடர்பாக மின்னம்பலம் இணைய இதழில் எழுதியிருப்பதாவது: ஜெயலலிதா இருந்தவரைக்கும் அவர் வெளியிட்டதுதான் வேட்பாளர் பட்டியல், அவர் வைத்தவர்தான் மாசெ, அவர் நினைத்தால்தான் மந்திரி, அவர் நினைத்துவிட்டால் எந்திரி என்பதே நிலைமை. வேட்பாளராக அறிவித்துவிட்டு அவர் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும்போதே மீண்டும் மாற்றியவர் ஜெ.ஆனால், இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பொறுப்புகளில் இருந்து எடப்பாடியும், பன்னீரும் அதிமுகவை நிர்வகிப்பதாக சொல்லிக் கொண்டாலும், அவர்களின் ஆளுமை கட்சிக்குள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஞாயிறு இரவு அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த கலகம் உரக்கச் சொல்லியிருக்கிறது. தேனி தொகுதியைக் குறிவைத்து விருப்ப மனு தாக்கல் செய்தார் ஓ.பன்னீரின் மகன் ரவீந்திரநாத். ஆனால், அதன் பின் தேனி தொகுதியின் நிலைமையை விசாரித்து, தனக்கு தேனி சரிப்பட்டு வராது என்றும், ஓபிஎஸ்சின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் வருவதால் விருதுநகர் தொகுதியில் நிற்கலாமா என்றும் யோசித்தார்.


இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் அமைச்சரும், ஜெ பேரவை செயலாளருமான ஆர்.பி. உதயகுமாரிடம் ஆலோசித்திருக்கிறார். தெற்கே இந்த ஆலோசனை நடப்பதாகத் தகவல் தெரிந்த உடனேயே எடப்பாடி தரப்பில் விருதுநகர் தொகுதியை தேமுதிகவுக்குத் தள்ளிவிட்டார்கள். ‘ரவீந்திரநாத் தேனியைத் தாண்டி வெளியே வந்துவிடக் கூடாது; அங்கே அமமுகவினர் அவருக்கு நெருக்கடி கொடுப்பார்கள்’ என்று கணக்குப் போட்டுத்தான் எடப்பாடி தரப்பு அவசரமாக விருதுநகரை தேமுதிகவுக்குத் தள்ளிவிட்டது என்றும் சொல்கிறார்கள். இந்நிலையில் முன்னாள் மதுரை மேயர் ராஜன் செல்லப்பா தன் மகனும் அதிமுக ஐடி விங் செயலாளருமான ராஜ் சத்யனுக்கு மதுரை தொகுதிக்கு முயற்சித்தார். ஏற்கனவே ராஜன் செல்லப்பாவுக்கும், உதயகுமாருக்கும் ஏழாம் பொருத்தம். அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு மதுரையில் தங்களை ஓரங்கட்டி அரசியல் செய்கிறார் உதயகுமார் என்று ராஜன் செல்லப்பா தரப்பினர் எரிந்துகொண்டிருந்தார்கள். இந்தப் பின்னணியில் மதுரையில் ராஜன் செல்லப்பாவின் மகனுக்கு சீட் கிடைக்கக் கூடாது என்று கருதிய அமைச்சர் உதயகுமார், உடனடியாக ஓபிஎஸ்சிடம் பேசி, ‘ரவீந்திர நாத்தை மதுரையில் போட்டியிட வையுங்க. அதுதான் தென் மாவட்ட அரசியலில் அவரை பெரிய ஆளாக்கும்’ என்று யோசனை சொல்லியிருக்கிறார்.


தேனியை விட்டால் போதும் என்ற நிலையில் இருந்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கடந்த சில நாட்களாக மதுரை தொகுதியைக் குறிவைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்தார். இத்தகவல் ராஜ் சத்யனுக்கு தெரியவர அவர் இரு நாட்களுக்கு முன் ரவீந்திரநாத்தை சென்னையில் சந்தித்து, ‘மதுரையில் நான் போட்டியிட இருக்கும்போது நீங்க எப்படி கேட்பீங்க?’ என்று சொல்ல இருவரும் வாதப் பிரதிவாதங்களில் சற்று கடுமையாகவே இறங்கியிருக்கிறார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் மதுரையை நழுவ விட்டுவிடக் கூடாது என்று ராஜன் செல்லப்பாவும், எப்படியாவது மதுரையைப் பிடித்துவிட வேண்டும் என்று ஓ.பன்னீர் மகனுக்காக உதயகுமாரும் முயன்று வந்தனர். இந்த மோதல் மேகம்தான் அதிமுக தலைமைக் கழகத்தில் ஞாயிறு இரவு சண்டையாக வெடித்தது. ஓபிஎஸ் மகனுக்காக உதயகுமாரும், தன் மகனுக்காக ராஜன் செல்லப்பாவும் அவருக்கு ஆதரவாக அமைச்சர் செல்லூர் ராஜூவும் களமிறங்கினர். இந்த சச்சரவில் அமைச்சர் உதயகுமார் தரப்பினருக்கு சட்டை கிழிந்ததாகவும் சொல்கிறார்கள் அதிமுக தலைமைக் கழகத்தில். எடப்பாடியோ ஏற்கனவே திட்டமிட்டப்படி ஓபிஎஸ் மகனை தேனியிலேயே நிறுத்துவது என்று முடிவெடுத்தார். மேலும் ஞாயிறு இரவு தலைமைக் கழகத்தில் நடந்த மோதலில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கோபம் அடைந்ததால் இதுகுறித்து எடப்பாடி அவரிடம் பேசியுள்ளார்.


இதையடுத்து, திங்கள் காலை அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் மதுரை மாநகர், புறநகர் என இதுவரை இரண்டாக இருந்த மாவட்ட அமைப்புகளை மூன்று அமைப்புகளாக மாற்றியுள்ளனர். மதுரை மாநகர் மாவட்டம் அப்படியே இருக்க, மதுரை புறநகரை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்து மதுரைப் புறநகர் மேற்கு மாவட்டத்துக்கு அமைச்சர் உதயகுமாரை மாவட்டச் செயலாளர் ஆக நியமித்துள்ளனர். ‘ராஜன் செல்லப்பா மகனின் வெற்றிக்கு உதயகுமார் வேட்டு வைத்துவிடக் கூடாது என்பதால்தான் அவருக்கு ஒரு மாவட்டச் செயலாளர் பொறுப்பைக் கொடுத்து செக் வைத்ததோடு தாஜாவும் செய்திருக்கிறார் எடப்பாடி’ என்கிறார்கள் அதிமுகவில்.

;