திரட்டப்பட்ட மற்றும் திரட்டப்படாத தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு குறித்த 9 சட்டங்களை உள்ளடக்கி சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு, 2019 என மூன்றாவது முறையாக தயாரிக்கப்பட்ட மசோதாவை, நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு முன் மொ ழிந்தது. 1.ஊழியர் மாநில காப்பீடு சட்டம் (ESI), 2. ஊழியர் பி.எப் மற்றும் இதரவை குறித்த பி.எப் சட்டம், 3. ஊழியர் நஷ்ட ஈட்டு சட்டம், 4. பிரசவ நிதி சட்டம், 5.கிராஜூவிட்டி சட்டம், 6.முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டம், கட்டிட, கட்டுமான தொழிலாளர் நலநிதி சட்டம், 8.சினிமா தொழிலா ளர் நல நிதி சட்டம் ஆகியவற்றோடு ஒன்பதாவதாக வேலை வாய்ப்பு மையங்களை ஒழிப்பதற்கான திட்டம் என அனைத் தையும் உள்ளடக்கியது இந்த தொகுப்பு மசோதா.
அனைத்து தொழிலாளர்க்கும் சமூக பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாகத்தான் இந்த சட்டத் தொகுப்பு என்கிறது அரசு. ஆனால் உண்மையில் பீடி, இரும்பு தாது சுரங்கம், மைக்கா சுரங்கம், மேங்கனீஸ் சுரங்கம், குரோம் தாது சுரங்கத் தொழிலாளர்கள் அனைவரும் சட்டப்படி அனுபவித்து வரும் சமூக பாதுகாப்பு,உரிமைகள், நலத்திட்டங்களை கேள் விக்குறியதாக்கி அனைவரும் மறந்துபோகும் நிலையை சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு 2019 ஏற்படுத்துகிறது.
வரிகள் சட்டத்திருத்தத்தின் மூலம் பீடித் தொழிலாளர் நல வரி சட்டம் 1971 ரத்தாகியுள்ளது 1.7.2017 லிருந்து பீடி நல வரி ஒழிக்கப்பட்டுள்ளது. இரும்பு தாது சுரங்கம், மேங்கனீஸ் தாது சுரங்கம், குரோம் தாது சுரங்கத் தொழிலாளர் நல வரிகள், மைக்கா சுரங்கம், சுண்ணாம்புக் கற்கள் மற்றும் டாலமைட் சுரங்க தொழிலாளர், சினிமா தொழிலாளர் நல வரிகள் 21.5.2016 முதல் சம்பந்தப்பட்ட சட்டங்களை திருத்தி ஒழிக் கப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து தொழிலாளர்களுமே துறைவாரியான சட்டம், நல வரி மூலம் பல்வேறு பணப்பயன் களை பெற்று வந்துள்ளனர். ஆனால் சமூக பாதுகாப்பு சட்டத்தொகுப்பு, 2019ல் இந்த துறைகள் வாரியான சமூக பாது காப்பு திட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதற்கான நல வரி ஏற்பாடுகளும் இல்லை. எனவே மேற்கண்ட தொழிலா ளர்கள் சமூக பாதுகாப்பு ஏற்பாடுகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். யதார்த்த உண்மை இவ்வாறிருக்க அனைவருக்கும் சமூக பாதுகாப்பு வழங்குவதுதான் தங்கள் நோக்கம் என அரசு கூறுவது பெரிய ஏமாற்று வேலை.
20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர் பணிபுரி யும் நிறுவனங்களுக்குத்தான் பி.எப். சட்டம் அமலாகும். வெகு காலம் முன்பே, இந்த 20 என்ற வரம்பை குறைக்க வேண்டும் என மத்திய பி.எப்.அறங்காவலர் குழு ஏகமனதாக பரிந்துரை வழங்கியிருந்த போதிலும் அமலாக்கப்படவில்லை. 20 என இருக்கும் போதே அமலாக்க நடைமுறைகள் பலகீனமாக உள்ளதாலும், சட்ட மீறலுக்கு சிறிதளவே அபராதம் என்பதா லும், பாதிக்கும் மேற்பட்ட தகுதியான நிறுவனங்களில் கூட பி.எப்.சட்டம் அமலாகவில்லை. சட்டத் தொகுப்பு மூலம் பி.எப். சட்ட அபராதம் உள்ளிட்டு தளர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர் பணிபுரியும் நிறுவனங்களில்தான் இஎஸ்ஐ சட்டம் அமலாகும். 10 என்ற போதிலும் பி.எப்.சந்தாதாரர்களில் பாதிப்பேர் அளவு தான் இஎஸ்ஐ உறுப்பினர்கள். மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள அமலாக்கப் பிரிவுகள் மிக மோசமாக செயல்படுகின்றன. 20,10 என்ற வரம்புகளை அகற்றாமல் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு என அரசு பிதற்றுவது எவ்வளவு அபத்தமானது?
ஊழியர் பி.எப்.
சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு 2019க்குள் பி.எப். சட்டம் உள்ளடக்கப்படும். அதேசமயம், அரசு பி.எப்.சட்டம் 1952க்கு பல சீர்குலைவு திருத்தங்களை முன் மொழிந்துள்ளது. இத்திருத்தங்கள் வேலை அளிப்பவருக்கு சாதகமானவை. ஊதியம் குறித்த புதிய வரையறை, வேலை அளிப்பவர் பி.எப்.பிற்கு செலுத்த வேண்டிய பங்களிப்பு குறைப்பு, பங்க ளிப்பு விகிதத்தை மாற்றியமைக்க கூடுதல் நிர்வாக உத்தரவு கள், தற்போதுள்ள ஊழியர் பென்சன் திட்டத்திற்கு பதிலாக, தொழிலாளர்களின் பங்களிப்பை கோரும் புதிய பென்சன் திட்டம் போன்றவைகளே இந்த திருத்தங்கள். பி.எப். முதன்மைச் சட்டத்தில் 4 பட்டியல்கள் உள்ளன. இவை, சமூக பாதுகாப்பு பயன்கள் யாருக்கு பொருந்தும் என பட்டியலிடுகின்றன. உதாரணமாக, பட்டியல் 1ல் பி.எப். சட்டம் எந்தெந்த தொழிலுக்கு பொருந்தும் என பட்டியலிடப் பட்டுள்ளது. தொழிலாளர் சட்டங்களை எளிமையாக்குவது என்ற பேரால்புதிய சட்டத் தொகுப்பில் அனைத்து பட்டியலும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் அதிகார வர்க்கம் தங்களுக் குள்ள வரையறையற்ற நிர்வாக அதிகாரம் மூலம் தங்கள் இஷ்டம் போல் பி.எப். பொருத்தப்பாடு மற்றும் சட்டத் தொகுப்பின் ஷரத்துக்களை வியாக்யானம் செய்வார்கள்.
இஎஸ்ஐ சட்டம்
தற்போதுள்ள இஎஸ்ஐ சட்டம் மிக மோசமாக அமலா கிறது. பி.எப். சட்டத்திலுள்ள 20 என்ற வரம்பு போல் அல்லாமல், இஎஸ்ஐ சட்டம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர் பணி புரியும் நிறுவனங்களுக்கு பொருந்தும் என இருந்தும், பி.எப்.சந்தாதாரர்களில் பாதிப்பேர் அளவு கூட இஎஸ்ஐ சந்தாதா ரர் எண்ணிக்கை இல்லை. இதுதான் இஎஸ்ஐ திட்டம் அம லாகும் லட்சணம். துரதிர்ஷ்டவசமாக, இஎஸ்ஐ சட்டத்தில் தற்போதுள்ள ஷரத்துக்களை பலவீனப்படுத்தி, அமலாக்கத்தில் உள்ள பிரச்சனைகளை சமூக பாதுகாப்பு சட்டத்தொகுப்பு 2019 கணக்கில் கொள்ளவில்லை. இது முதலாளிகளுக்கு சாதக மானது; தொழிலாளர்களுக்கு பாதகமானது.
சட்டத் தொகுப்பின் 41(4), 41(5) பிரிவுகளின்படி,இஎஸ்ஐ அமலாக்கம் நீர்த்துப் போகியுள்ளது மட்டுமல்ல, இஎஸ்ஐ நிதியை பயன்படுத்தி மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகள், நர்ஸ் கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தி, இஎஸ்ஐ இயக்குமாம். இது அரசின் அரசியல் கட மையாகும். இஎஸ்ஐ நிதி தொழிலாளர்களுக்கு கூடுதல் மருத்துவ சேவை வசதிகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக, படை மாற்றம் செய்யப்படுகிறது. சட்டப்பூர்வமான இஎஸ்ஐ-ன் முத்தரப்பு ஆட்சிக்குழுவில் இத்தகைய மடைமாற்றத்திற்கு கடு மையான எதிர்ப்பு எழுப்பப்பட்டும், அரசு அலட்சியப் படுத்தியுள்ளது.
கிராஜூவிட்டி சட்டம்
ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக்கத்தின் ஏகமனதான கோரிக்கைகளை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இது சட்டத் தொகுப்பில் பிரதிபலிப்பதை காணலாம். நீண்ட சேவைக்குப்பின் வழங்கப்படுவது தான் கிராஜூவிட்டி, அதாவது பணிக்கொடை. எனவே அதற்கு எந்த தடையோ, வரம்போ தகுதியை தீர்மானிப்பதில் கணக்கிடும் முறையில் இருக்கக்கூடாது. இந்த நியாயமான கோரிக்கையை சட்டத் தொகுப்பு கவனத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. அம லாக்கம் நீர்த்துப் போகிறது. அபராதங்கள் குறைக்கப்பட்டு, கிராஜூவிட்டி சட்டத்தை மீறுபவர்க்கு சாதகமான நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கட்டிட, கட்டுமான தொழிலாளர் சட்டம், 1996
கட்டிட நலவரி சட்டம், சட்டத்தொகுப்பில் உள்ளடங்கும். ஆனால் நலவரி நிர்வாகம் குறித்து முழு மவுனம் சாதிக்கி றது. கட்டுமான தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு பயன் களை பொறுத்தவரை, பயன்களின் விபரம், யாருக்கு பொருந்தும், நலத்திட்ட விநியோகம் குறித்தும் முழு மவுனம் சாதிக்கிறது. மாநில வாரியங்கள் இவற்றை தீர்மானிக்கலாம் என விடப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டுமான தொழிலாளர் நல வாரியங்கள் திருப்திகரமாக செயல்படவில்லை. நலவரி வசூலில் சுணக்கமும், பலவீனமும் உள்ளது. வசூலிக்கப்பட்ட நலவரியில் 25 சதம் மட்டுமே 2012 வரை செலவிடப்பட்டுள் ளது. சட்டத் தொகுப்பு நல வாரியங்களின் பலவீனமான செயல் பாடுகளை கணக்கில் கொள்ளவில்லை. கட்டுமானத் தொழி லில் ஏராளமான விபத்துக்கள் நடைபெறுகின்றன. எனவே கட்டுமான வாரியம் முறையாக செயல்பட ஆவண செய்யப்பட வேண்டும். சட்டத் தொகுப்பு இதை செய்யவில்லை. எனவே, ஒட்டு மொத்தத்தில் அனைத்துப்பிரிவு தொழிலா ளர்களின் அடிப்படையான சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்மூலமாக்குவதே இதன் நோக்கம்.
ஏற்கனவே தொழில்ரீதியான 98 பிரச்சனைகளில் நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டங்களை புறக்கணித்து மத்திய அரசு நிர்வாக அதிகாரம் மூலம் மாறுதல்களை செய்ய முடியும். உரிய அரசுகள் தன்னிச்சையாக 30 பிரச்சனைக ளில் இவ்வாறு அதிகாரத்தை தம் வசம் வைத்துக் கொள்ள முடியும். மொத்தமாக 128 பிரச்சனைகளில், நாடாளுமன்றத் தின் இறையாண்மையை மத்திய, மாநில அரசுகள் நிர்வாக முடிவுகள்/உத்தரவுகள் மூலம் மீற முடியும். இதற்கு மேற்கண்ட சட்டத் தொகுப்பு வழி செய்கிறது.
உதாரணமாக, சட்டத்தொகுப்பின் பிரிவு 5(1) உட்பிரிவு (a), (B), (C)-க்கள் படி மத்திய அரசு பல்வேறு பி.எப். திட்டங்க ளை அறிவிக்கைகள் மூலம் கொண்டு வர முடியும்; 5(1), (d) பிரிவின்படி “(a), (b) மற்றும் (c) பிரிவுகளில் உள்ள எந்த ஒரு திட்டத்தையும் முன்தேதியிலிருந்தோ அல்லது தற்போதிலி ருந்தோ திருத்தவோ அல்லது மாற்றவோ முடியும். பிரிவு 6(a)ன்படி, “மத்திய அரசு ஊதியத்தில் எத்தனை சதவீதம் பி.எப். பங்களிப்பு என்பதை வரையறுக்க முடியும். பிரிவு 31(2)ன் படி இஎஸ் திட்டத்திற்கான தொழிலாளி மற்றும் வேலையளிப்ப வர் பங்களிப்பை மத்திய அரசு தீர்மானிக்கலாம்.
சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான பங்களிப்பு தொகை நிர்ணயிப்பது, எந்தெந்த நிறுவனங்களுக்கு விதிவிலக்கு என தீர்மானிப்பது மற்றும் பல்வேறு அதிகாரிகள் நியமனம் உட்பட தனது நிர்வாக அதிகாரத்தின் மூலம் மத்திய அரசே தன்வசம் கொண்டு வருகிறது.
இந்திய உழைக்கும் மக்களுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு மேற்கொண்டுள்ள ஈவிரக்கமற்ற எண்ணற்ற தாக்குதல்களில், மேலே குறிப்பிட்டுள்ள சமூகப் பாதுகாப்பு அம் சங்களை சீர்குலைப்பது என்பது ஒரு அம்சம் மட்டுமே. அனைத்து விதமான தாக்குதல்களையும் எதிர்த்து இந்திய தொழிலாளி வர்க்கம் பேரெழுச்சியுடன் எழுகிறது. ஜனவரி 8 (நாளை) கோடிக் கணக்கான உழைப்பாளிகள் களம் இறங்குகிறார்கள். வெல்லட்டும், நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்.