வடவள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், வடவள்ளியை அடுத்த நவாவூர் பிரிவைச் சேர்ந்தவர் விக்னேஸ்பாபு. இவரது மகன் ஆதர்ஸ் (18). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவரும், இவரது நண்பர்களான வடவள்ளி எஸ்.வி.நகரைச் சேர்ந்த ரோஷன் (19), ரவி (18), நந்தனன் (18) ஆகியோரும், பூலுவப்பட்டியில் உள்ள ரிசார்ட்டில் வியாழனன்று ஓணம் பண்டிகையை கொண்டாடினர். இதையடுத்து வெள்ளியன்று அதிகாலை காரில் நான்கு பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். காரை ரோஷன் ஓட்டி வந்துள்ளார். தென்னமநல்லூர் கரியகாளியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்குள்ள வளைவில் காரை ரோஷன் திருப்ப முயன்றுள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோரமிருந்த சுமார் 120 அடி ஆழமுள்ள, 40 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பியிருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது.
ரோஷன் கார் ஓட்டி வந்ததால் அவர் மட்டும் கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார். ஆனால் மற்ற 3 பேரால் காருக்குள் இருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் ஆதர்ஸ், ரவி, நந்தனன் ஆகிய 3 பேரும் காருக்குள்ளேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதையடுத்து கிணற்றிலிருந்து வெளியே வந்த ரோஷன் நடந்த சம்பவத்தை அப்பகுதியினரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பேரூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், ஆலாந்துறை காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி மற்றும் தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் பகுதியிலிருந்து தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி கிணற்றுக்குள் மூழ்கி கிடந்த கார் வெளியே கொண்டு வரப்பட்டது.
அதில், உயிரிழந்த கிடந்த கல்லூரி மாணவர்கள் 3 பேரையும் காவல் துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த நந்தனன் குத்துச்சண்டை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.