tamilnadu

img

விளையாட்டுக்கதிர் சைக்கிளிங் பீனிக்ஸ் பறவை! - சி.ஸ்ரீராமுலு

கிரிக்கெட் உலகம் மறக்கமுடியாத நபர்களில் யுவராஜ் சிங். என்றென்றும் ராஜாவாக வலம் வந்த அவர், கிரிக்கெட் விளையாட்டில் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தமானவர். ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். புற்றுநோயால் அவதிப்பட்ட போது அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் மட்டுமன்றி உலக கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு தூணாக நின்றார்கள். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பி இந்திய அணியில் விளையாடியது ஒரு அபூர்வ நிகழ்வாகும். அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவின் சைக்கிள் வீரர் ஒருவர் இடம் பிடித்திருக்கிறார்.
மாறாதது ஏதுமில்லை...
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரராக வலம் வரும் மேத்யூ கிளாசர் அடிலெய்டு நகரில் பிறந்தவர். 27 வயதாகும் இந்த இளம் வீரரான இவர் கிறித்துவ குடும்பத்தில் பிறந்ததால் தனது இளமை பருவத்தில் போதகராக வரவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஒருநாள் விளையாட்டாக சக நண்பர்களோடு சைக்கிளில் பயணித்த போது, தன்னாலும் ஒரு சைக்கிளிங் வீரராக வரமுடியும் என்பதை உணர்ந்திருக்கிறார்.  ஆர்வம் அதிகமானதால் தொடர்ந்து சைக்கிள் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். நண்பர்கள், உறவினர்களின் ஒத்துழைப்போடு முறையான பயிற்சிக்கு சென்றுள்ளார். ஆரம்பத்தில் உள் ஊரில் சின்னச்சின்ன போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வென்றார். தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்த மேத்யூ கிளாசர் தொடர்ந்து சைக்கிளிங் விளையாட்டில் கவனத்தை திசை திருப்பினார். மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றதால் தொழில்முறை வீரராகவே மாறுவது என்று முடிவு செய்தார்.  ஆஸ்திரேலியாவின் சைக்கிளிங் குழுவோடு தன்னையும் இணைத்துக் கொண்டு போட்டிகளில் பங்கேற்க துவங்கிய மேத்யூ கிளாசர், முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த ‘டீம் பிரிண்ட்’ பிரிவு உலகச் சாம்பியன் தொடரில் முதன்முதலாக ‘கோல்ட் மெடல்’ தட்டினார். 2008ஆம் ஆண்டில் ‘ஸ்பிரிண்ட்’ பிரிவில் மேலும் ஒரு தங்கத்தை வென்றார்.
ஹாட்ரிக்
2014 ஆம் ஆண்டு கிளாஸ்கோ நகரிலும், 2018 ஆம் ஆண்டு கோல்டு காஸ் நகரிலும் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் ‘கீரின்’ பிரிவு சைக்கிளிங் போட்டிகளிலும், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கான சைக்கிளிங் போட்டியிலும் தனி நபராக மூன்று தங்கப்பதக்கங்களை அள்ளினார். உலகச் சாம்பியன் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் இரண்டு வெள்ளியும் 3 வெண்கலப் பதக்கங்களையும் குவித்திருக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும், 2016 ஆம் ஆண்டில் பிரேசிலின் ரியோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றாலும் பதக்க கனவு நிறைவேறவில்லை. குழு போட்டியில் ஆஸ்திரேலியா அணியினர் மயிரிழையில் வெண்கலப்பதக்கதையும் தவற விட்ட அணியில் மேத்யூ கிளாசரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வேகத்தில் வேகம்...
2010 ஆம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் சைக்கிள் போட்டியில் பதக்கம் வென்று கொடுத்ததோடு, 2014 ஆம் ஆண்டில் ‘ளர்ந்து வரும் இளம் வீரர்களின்’ சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்தவர் மேத்யூ. சைக்கிளிங் விளையாட்டில் நீண்ட தூர பயணத்திலும் வெற்றிவாகை சூடிய இவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தைராய்டு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தனர். இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஆனாலும் போட்டிகளில் கடந்த காலங்களைப் போன்று விளையாட முடியுமா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மேத்யூ, தொடர்ந்து பயிற்சியில் கவனம் செலுத்தியதால் சீனத் தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற யுசிஐ ட்ராக் சைக்கிளிங் போட்டியில் தன்னம்பிக்கையுடன் மீண்டும் களமிறங்கினார். வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த உலகக்கோப்பையில் பதக்கம வென்ற மேத்யூ கிளாசருக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. சக வீரர்களும் வாழ்த்து தெரிவித்தனர். உலகக்கோப்பையில் தனது திறமையை மீண்டும் நிரூபித்து இருக்கும் மேத்யூ, “அடுத்து நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டிலும் பதக்கம் வென்று தன்னால் சாதிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டுவேன்” என்கிறார். அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல சாதிக்க நினைக்கும் பலருக்கும் நம்பிக்கை சுடராகும்.

;