உடுமலை, ஆக. 11- சுதந்திர தின விழாவையொட்டி வாசிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் உடுமலை கிளை நூலகத்தில் ஓவியம், கட்டுரை மற்றும் கவிதைப் போட் டிகள் நடைபெற்றன. சுதந்திர தின விழாவையொட்டி வாசிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளியில் ஓவியம், கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. கிளை நூலகம் (எண் 2-ல்) சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற ஓவியம் மற்றும் கவிதை போட்டிகளை நூலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு தலைமை வகித்து நடத்தினார். இதில் வாசிப்பை நேசிப்போம், இயற்கை காட்சிகள் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், தலைவர்கள் படித்த நூல்கள், என்னை செதுக்கிய நூல்கள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், வாசிப்பு வேட்கை, ஏன் வேண்டும் நூலறிவு, நற்றுணையாவது நல் நூலே என்ற தலைப்பில் கவிதை போட்டியும் நடைபெற்றன. இதில் உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள், உடுமலை சிவசக்தி காலனி அரசு உயர் நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ருத்ரப்பாநகர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஹேண்ட்இன் ஹேண்ட் உண்டு உறைவிடப் சிறப்பு பயிற்சி மைய பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சுதந்திர தினத்தன்று சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் சிவசக்தி காலனி அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கே.பாலசுப்ரமணியன், துணை தலைவர் சிவக்குமார், நூலகர் வீ.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.