tamilnadu

img

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில், சூப்பர் ஓவர் முறையில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் வெல்லிங்டன் நகரத்தில், இந்தியா மற்று நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 4வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை சேர்த்தது. இதில் மணிஷ் பாண்டே 36 பந்துகளுக்கு 50 ரன்களும், கே.எல். ராகுல் 26 பந்துகளுக்கு 39 ரன்களும் இந்திய அணிக்கு சேர்த்தனர். நியூசிலாந்து அணியின் இஷ் சோதி அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதை அடுத்து, 166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 165 ரன்களை எடுத்தது. கோலின் முன்ரோ 47 பந்துகளுக்கு 64 ரன்களும், டிம் சவுத்தி 39 பந்துகளுக்கு 57 ரன்களும் நியூசிலாந்து அணிக்கு சேர்த்தனர். இப்போட்டியும் சமனில் முடிவடைந்த நிலையில், சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது.

நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 13 ரன்கள் அடித்தது. பின்னர் 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். கேஎல் ராகுல் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். 3 பந்தில் நான்கு ரன் தேவை என்ற நிலையில் விராட் கோலியுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். 4-வது பந்தில் இரண்டு ரன்கள் அடித்த விராட் கோலி ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
 

;