குஜராத் விவசாயிகள், காப்புரிமை பெற்ற உருளைக் கிழங்கை பயிரிட்டதாகக் கூறி நஷ்ட ஈடு கேட்டு பெப்ஸி நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெப்ஸி நிறுவனம் இந்தியாவில் லேஸ் என்ற துணை நிறுவனத்தின் பெயரில் உருளைக் கிழங்கு சிப்ஸ் விற்பனையைச் செய்து வருகிறது. இதற்காக லேஸ் நிறுவனம் அதன் சிப்ஸ்களுக்கு எஃப்எல்-2027 மற்றும் எஃப்சி-5 ரக உருளைக்கிழங்குகளை பதிவுசெய்து பயன்படுத்தி வருவதாகவும், அதனைப் பிறர் பயிரிட உரிமை கிடையாது என்று பெப்ஸி நிறுவனம் குஜராத்தை சேர்ந்த 9 விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், 4 விவசாயிகளிடம் 1.05 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பெப்ஸி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களது நிலத்தில் விளையும் பயிர்களின் விதைகளைப் பதப்படுத்தி மீண்டும் அதனை பயிர் செய்யத் தங்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளனர். இந்த விவசாயிகள், 3 முதல் 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருபவர்கள். இவர்கள் யாரும் பெப்ஸிக்கு ஒப்பந்தமாகக் கூட உருளைக்கிழங்கு கொடுத்ததில்லை. இவ்வளவுப் பெரிய நிறுவனத்திற்கு எதிரான வழக்கை தங்களால் எதிர்கொள்ளவே முடியாது என்பதால், இதில் மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து, விவசாயிகள் மீது பெப்ஸி நிறுவனம் தொடுத்திருக்கும் இந்த வழக்கைக் கண்டு, இந்தியா முழுவதும் விவசாயிகள் கண்டித்துள்ளனர். இது விவசாயிகளுக்கு மட்டுமல்ல, பயிர் பாதுகாப்பு சட்டத்துக்கும் எதிரானது. எனவே, விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை பெப்ஸி நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.