tamilnadu

img

வீராணம் ஏரி நிரம்புகிறது: வெள்ள அபாய எச்சரிக்கை....

சிதம்பரம்:
கடலூர் மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2 நாட்களாக காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.ஏரியின் நீர்மட்டம் 45.90 அடியாக இருந் தது. தற்போது ஏரியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ஏரியிலிருந்து 90 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் செங் கால்ஓடையில் இருந்து வீராணம் ஏரிக்கு புதனன்று (டிச. 2) காலை வரை 41 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர் மழை காரணமாக புதன் மதியம் அது 110 கனஅடி நீராக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-வேகமாக நிரம்பி வரும் வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி வடவாறில் இருந்து வரும் தண்ணீரின் அளவு தற்போது குறைக்கப் பட்டுள்ளது. ஆனால், தொடர் மழை காரணமாக வடவாறுக்கும் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வடவாறில் இருந்து  900 கனஅடி நீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட உள்ளது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயரக்கூடும். அதற்கேற்ப ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, வீராணம் ஏரியை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் மணல் மூட்டைகளை கொண்டு வீராணம் ஏரியின் கரையை பலப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் வீராணம் ஏரியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதி பொதுமக்களிடையே வீராணம் ஏரி நிரம்பி வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.வீராணம் ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோர பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக திருமண மண்டபங்கள், முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக ராட்சத குழாய் மூலம் 68 கன அடி தண்ணீர் அனுப் பப்பட்டு வருகிறது.