tamilnadu

img

சிஏஏவுக்கு எதிராக வலுவான குரலெழுப்பியவர் கேரள முதல்வர்

கொச்சியில் கனிமொழி பேச்சு

கொச்சி, ஜன.18- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதி ராக நாட்டிலேயே மிகவும் வலுவான குரல் கொடுத்தவர் கேரள முதல்வர் பினராயி விஜயன் எனவும் இத்தனை அழுத்தமாக வேறு எவரும் எதிர்வினையாற்றவில்லை எனவும் திமுக மகளிர் அணி தலைவர் கனி மொழி எம்.பி. கூறினார். எர்ணாகுளம் நகராட்சி அரங்கில் (டவுண் ஹால்) முஸ்லிம் கல்வி சங்கத்தின் சார்பில் நடந்த வனிதா சங்கமத்தை துவக்கி வைத்து, அவர் மேலும் பேசியதாவது:  தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆறுபேர் போராடினால் அவர்களை கைது செய்ய 60 காவல்துறை யினர் வருகிறார்கள். கேரளத்தில் எந்த இடத்திலும் போராடலாம் என்பது இங்குள்ள அரசுக்கு தைரியம் உள்ளதால்தான். மதச் சார்பற்ற நாட்டில் வாழ விரும்பாதவர்கள் தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். பன்மைத்துவம் என்பதே தேசத்தின் சக்தி. தொலைக்காட்சியின் முன்பு கருத்து சொல்லாமல் மவுனம் காக்கும் பெண்கள் உட்பட தெருவில் இறங்க வேண்டும். 

அவசரகதியில் குடியுரிமை திருத்த சட் டம் எதற்காக கொண்டுவந்தார்கள் என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும். இரவு 10.30 மணிக்கு மக்களவையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. அடுத்தநாள் மாநி லங்களவையிலும் நிறைவேறியது. அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் மசோதா தோல்வி அடைந்திருக்கும். தமிழ்நாட்டில் உள்ள அமைச்சரவை பாஜகவின் நிழல் அமைச்சரவைதான். போராடுவதற்கு கூட அங்குள்ள அரசு அனுமதி வழங்குவ தில்லை. இரண்டாம் மோடி அரசு வந்த பிறகு ஒரு பகுதியினருக்கு எதிராகவே சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. காஷ்மீரை அமித்ஷா இரண்டாக்கினார். சங் பரிவார் நாடு முழுவதையும் காவிமயமாக்கி வரு கிறது. முடிந்தால் காந்திக்குகூட அவர்கள் காவி போர்த்துவார்கள். ஊடகங்கள் தணிக்கைக்கு உட்படுவதையும் மிக விரை வில் நாம் காண நேரிடலாம் என கனிமொழி கூறினார். நிகழ்ச்சிக்கு எம்இஎஸ் தலைவர் டாக்டர்  பி.ஏ.பசல் கபூர் தலைமை வகித்தார். விணா ஜார்ஜ் எம்எல்ஏ, லாலி வின்சென்ட், கீதா பாபு உள்ளிட்டோர் பேசினர்.
 

;