tamilnadu

img

நாகையில் சுனாமி நினைவு தினம்

நாகப்பட்டினம், டிச.26- 2004, டிசம்பர்-26 ஆம் நாள், அந்தக் கருப்பு தினத்தில், நாகை மாவட்டத்தைப் புரட்டிப் போட்ட சுனாமியின் 15-ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை அன்று நடைபெற்றன. சுனாமியின் இன்னும் ஆறாத துயரத்தில் நாகை மாவட்டத்தின் நீண்ட கடற்கரையில் நூற்றுக்கணக்கான மீனவ கிராமங்களின் மீனவ மக்கள், சுனாமியில் பலியான ஆயிரக்கணக்கான சொந்தங்களின் நினைவாகக் கடற்கரையில் படையலிட்டு, ஒப்பாரி வைத்து அழுது, கடல் அன்னைக்கு மலர் தூவி வழிபட்டனர். நாகைக் கடற்கரையில் மீனவப் பெண்கள் கடலை நோக்கி மீண்டும் இப்படிப்பட்ட பேரிடர் நேரக் கூடாது என வேண்டினர்.

வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் அதிபர் பிரபாகரன் தலைமையில் பொதுமக்கள், வணிகர்கள் பலர் கலந்து கொண்ட அமைதிப் பேரணி புறப்பட்டு நகரின் மேற்கே அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அருட்தந்தை பிரபாகரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவுப் பூங்காவில் ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினம், மாணவ மாணவியர், அரசு அலுவலர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.