லக்னோ:
தேர்தலில் வாக்களிக்க வராதவர்களின் ஓட்டுகளை, பாஜக-வினரே போட்டு விட வேண்டும் என்று சங்கமித்ரா மவுரியா என்ற பாஜக வேட்பாளர் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பதாவுன் மக்களவைத் தொகுதிக்கான பொதுத்தேர்தல், செவ்வாயன்று (ஏப். 23) நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் சங்கமித்ரா மவுரியா போட்டியிடுகிறார். இவர், உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியாவின் மகள் ஆவார்.
இந்நிலையில், கட்சித் தொண்டர்கள் மத்தியில் சங்கமித்ரா, தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அப்போது, “நமது தொகுதியில் முழு வாக்குப்பதிவு நடக்க வேண்டும். தேர்தல் அன்று சிலர் வாக்களிக்க வராமல் இருக்கலாம். அதற்காக அந்த ஓட்டு வீணாகி விடக் கூடாது. யாராவது ஓட்டுப் போட வரவில்லை என்றால் அதை கள்ள ஓட்டாக பதிவு செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.தற்போது இது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. சங்கமித்ராவைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.