நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் விளம்பரங்கள் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரசாரம் மற்றும் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், இயற்கை வளங்களை பாதிக்கும் வகையில் விளம்பரங்கள் செய்வதை தடுக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இயற்கை வளங்களான மலைகள், குன்றுகள், பாறைகள், மரங்கள் மற்றும் அரசு சொத்துகளான நெடுஞ்சாலை பாலங்கள், சுவர்கள், ரெயில் பாலங்களில் அரசியல் கட்சியினர், வணிக நிறுவனங்கள், மத அமைப்புகள் தங்களது விளம்பரங்களை செய்கின்றனர். இதனால் அவற்றின் இயற்கை அழகு கெடுவதுடன், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். நடைபாதைகளை மறைத்தும் சாலை ஓரங்களிலும் சாலைகளின் நடுவிலும் விளம்பர போர்டுகளை வைக்கின்றனர். தற்போது தேர்தல் நேரம் என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இயற்கை வளங்களான மலைகள், காடுகள் மற்றும் சாலைகளில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிப்பதாகவும், இந்த உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.