tamilnadu

img

நிஜமாய் ஒரு இந்தியக் கனவு - நீடா சுப்பையா

அந்த தாலுக்கா அரசு மருத்துவமனையில்  தினமும் சராசரியாக 3000 புறநோயாளிகள். எப்போதும் 250 உள்நோயாளிகள். ஆனால் மருத்துவமனையின் எந்த இடத்திலும்   ஒரு துண்டு காகிதத்தைக்கூட  பார்க்க முடியாது.  முடநீக்கியல், மகப்பேறு, குழந்தை மருத்துவம், புற்றுநோய், பிசியோதெரபி, பல் மருத்துவம், பொது மருத்துவம், இருதயம், கண், காது, மூக்கு, தொண்டை, சிறுநீரகவியல், அழகு மருத்துவம், உளவியல் மற்றும் போதை  அடிமை  மீட்பு என  20 துறைகளைச் சார்ந்த புற நோயாளிகள் பிரிவுகளின் வாசல்களில்   டிஸ்ப்ளே தெரியும். அதன்படி மருத்துவரிடம் செல்வதால்  முண்டியடித்துக் கொண்டு கால்கடுக்க நிற்கும் நோயாளிகளை  பார்க்கமுடியாது. புறநோயாளிகள் பிரிவுகளில் நூற்றுக்கணக்கான நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். எனவே நோயாளிகள்  அமர்ந்திருக்கும் அந்த அமைதியை இந்தியாவில் வெறெந்த அரசு மருத்துவமனையிலும்  நாம் பார்க்க முடியாது.   மாதந்தோறும் சராசரி 150 பிரசவங்கள்   சர்வதேச விகிதமான  100 பிரசவங்களில் 10-க்கும்  குறைவான சிசேரியன் பிரசவங்கள். 90 சதவீதத்திற்கும் மேல் வலியில்லா நார்மல் பிரசவங்கள்,  நைட்ரஸ் ஆக்சைடு ஆக்சிஜன் கலவையை சுவாசித்ததோடு   சிரித்துக் கொண்டே பிரசவ அறைக்குள் செல்லும்  பல நிறைமாத கர்ப்பினிகள்  பிரசவத்தின்போது கணவரும் உடனிருக்கும் தோழமை பிரசவத் திட்டம், தானியங்கி பிரசவ கட்டில்,  மாநிலத்தில் தனித்துவமான   முன் மாதிரி மகப்பேறு உள்கட்டமைப்பு,  முற்றிலும் குழந்தைகளுக்கென தனி வார்டுகள்  ஆகியவை உள்ளது இதன் சிறப்பு.

இரத்தக் கூறு பிரிப்புப் பிரிவு மற்றும்   முதுகலை  பட்டம் பெற்ற  மருத்துவர்களின்  24 மணி நேர நேரடி  சேவையில் அனைத்து நவீன வசதிகளுடன்  இயங்கும் நகரத்தின்  மைய  இரத்த வங்கி.  ரத்தம் பெறும் மக்களின் ஒரு ஆண்டு கூடுதலில்  மாத சராசரி   1200 பேர்    3000  குருதிக்கொடையாளர்கள்.  24 மணி நேர ஐ.சி.டி.சி ஆய்வகம், மருத்துவ ஆய்வகம், திசுநோய் கூறியல் ஆய்வகம், கருவுறாமை ஆய்வகம், நுண்ணுயிரியல் ஆய்வகம் ஆகியவை உள்ளன. அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை தீவிர கண்காணிப்பு பிரிவுகள், 16 வார்டுகள் எப்போதும் 250 உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். நுண்ணுயிரி நீக்கம் செய்யப்பட்ட மையப்படுத்தப்பட்ட உயிர்க்காற்று வசதி கொண்ட மூன்று உயர் நவீன அறுவை சிகிச்சை அரங்கங்கள், அவசர சிகிச்சை பிரிவு,தடையில்லா மின்சாரம் தண்ணீர் விநியோகம், முழு முழங்கால் மாற்று, முழு இடுப்பு மாற்று, இருமுனை எலும்பு முறிவு சரிசெய்தல், திபியா உள் நிர்ணயம், இன்டெரோகோக்ட்ரிக் எலும்பு முறிவு உள்பட மாதத்திற்கு 500 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

13 டயாலிசிஸ் மெஷின்கள், நான்கு ~ஷிப்டுகளில் 25 செவிலி டயாலிசிஸ் ஊழியர்கள் 29 சிறப்பு மற்றும் பொது மருத்துவர்கள், 278 மருத்துவனை ஊழியர்கள்  துறைவாரியான அனுபவங்கள்  பிரச்சனைகள் சவால்களை விவாதித்து தீர்வு காணும்   ஊழியர்களின் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்கள், அனைத்துறை  நிறுவன பணியாளர்களின் மாதாந்திர மாநாடுகள், எந்த நேரத்திலும் எப்படிப்பட்ட நோயாளியிடமும் புன்சிரிப்போடு வழிகாட்டும்   லஞ்சம் தொட முடியாத செவிலிப் பணியாளர்கள் மருத்துவமனை  ஊழியர்கள்.  வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள் அனைவருக்கும் எல்லா சிகிச்சைகளும் இலவசம் இப்படி  ஏழை எளிய நோயாளிகளின்  ஏக்கங்களை ஒரு சேர தீர்த்து வைக்கும்  ஒரு தாலுக்கா அல்லது மாவட்ட  அல்லது மருத்துவ கல்லூரி மருத்துவமனையைதான்  கற்பனை செய்துகூட பார்க்க முடியுமா? முடியும் என்பதற்குதாரணமாய்   கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர்  தாலுக்கா அரசு மருத்துவமனை உள்ளது. இந்திய பொதுத்துறை-அரசு மருத்துவமனைகளிலேயே இந்த மருத்துவமனை முன்னுதாரணமாக இருப்பதை பாராட்டி தி இந்து டைம்ஸ்ஆப் இந்தியா டெக்கான் கிரானிகள் உள்ளிட்ட ஏராளமான ஆங்கில பத்திரிகைகளும் இணைய தள சஞ்சிகைகளில்  கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.   பிபிசியின் ஆவணப்படம் ஒன்றில்  இம்மருத்துமனையை இடம்பெறவிருப்பதாக  தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 9 ஆண்டுகளுக்கும்  மேலாக இம்மருத்துவமனையின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமான  மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஷாகிர்ஷா மருத்துவமனை நிர்வாகம், கூட்டங்கள் ஆய்வுகள் இவைகளோடு புறநோயாளிக்கும் சிகிச்சை அளிக்கிறார். உள்நோயாளிகளை பார்வையிட்டு கவுன்சிலிங் அளிக்கிறார். நமது ஆய்விற்கெட்டியவரையில்  இது மருத்துவ சேவையின் ஒப்புவமையில்லா சாதனை  எனக் கூறலாம்.    நேரில் அவரை   சந்திக்க  அவரது அறைக்குள்  நுழைந்தபோது தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் தீக்கதிர் நாளிதழின்  சகா என மகிழ்ச்சியோடு மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நமது கேள்விகளுக்கு தயக்கமின்றி அவரிடமிருந்து பதில்கள் கிடைத்தன.  எதிர்கால திட்டங்கள்  மருத்துவமனை பெற்ற விருதுகளைப் பற்றி கேட்டபோது,  சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு  உயர் நவீன மருத்துவம்  அளிக்கும் கேரள அரசின் கொள்கையின்படி பிரம்மாண்டமான பத்து மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 1.8 லட்சம் சதுர அடியில் அமையவிருக்கும் இக்கட்டிட பட்ஜெட் மதிப்பீட்டுத்தொகை  ரூ.68 கோடியாகும். என்று டாக்டர் ஷாகிர்ஷா கூறினார். மருத்துவமனைக்கு கிடைத்த அங்கீகாரங்கள் விருதுகளைப்பற்றிய பேசிய அவர் 2015 ஆம் அண்டு மத்திய அரசால் துவக்கப்பட்ட  காயகல்ப் விருதுகள் அடுத்தடுத்து   2016-2017, 2017-2018 ஆண்டுகளுக்கு  தொடர்ச்சியாக கிடைத்தன.தேசிய தர அங்கீகார சான்றும்  கிடைத்துள்ளது   ஆறு தொடர்ச்சியான ஆண்டுகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் செயல்திறனுக்கான விருதுகள் கிடைத்துள்ளன  மருத்துவமனை தரநிலை அங்கீகாரத்திற்கான கேரள காஷ் தரநிலை அங்கீகாரம்  கிடைத்துள்ளது  என்றவர்  இருப்பினும்  நாங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது என்று புன்னகையோடு கூறினார்.

 கேரள மாநிலத்தின் மகத்தான மருத்துவத்துறை கட்டமைப்பு இந்தியாவின்; முன்மாதிரி என்பது நாடு அறிந்ததுதான். ஆனால் புனலூர்  தாலுக்கா அரசு மருத்துமனை இந்தியாவின் மற்றொரு முன் மாதிரி என நாம் நிச்சயம் கூறலாம்.  உபி முதலமைச்சர்  ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான  கோரக்பூரில் பாபா ராகவ் தாஸ் மருத்துவகல்லூரி மருத்துவமனையில்  ஆக்சிஜன் இல்லாததால் 24 மணி நேரத்திற்குள்  30 குழந்தைகள் இறந்தன. அது ஒரு தேசிய அவமானமாகும். அதே சமயத்தில் புனலூர் தாலுக்கா அரசு மருத்துவமனைக்கென 96 சதவீத தூய்மையுடன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் சொந்தக் கட்டமைப்பும்  குழாய்கள் மூலமாக ஒவ்வொரு நோயாளியின் படுக்கை பக்கத்தில் கிடைக்கும் திட்டமிட்ட ஆக்சிஜன் விநியோக முறையும் உள்ளது. இது கேரளத்தின் தேசிய பெருமையாகும். மிக உயர் நவீன சிகிச்சை வசதிகளடங்கிய பத்து மாடி கட்டிடம் திறக்கப்படும்போது அது கேரள மருத்துவ கட்டமைப்பில் மற்றுமொரு வளர்ச்சிக்கட்டமாக அமையும் எனக் கூறலாம். 3 மணி நேரம் அந்த மருத்துவமனையில்  இருந்தோம். தமிழக மருத்துவமனைகளின் நிலையைப் பார்த்து  நொந்து சலித்த நமக்கு புனலூர் மருத்துவமனையை பார்த்த பிரமிப்பு அன்று முழுவதும் நீங்கவில்லை. புனலூருக்கு சுற்றுலா வருபவர்கள்   செங்கோட்டையிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள  அழகு நகரமான புனலூரில் மலைகள், மலைகளின் சாலைகள் மின் உற்பத்தி நிலையம் தொங்குபாலம் என பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. புனலூர் தாலுக்கா அரசு மருத்துவமனையும்  அதில் ஒன்று.

 

;