புதுதில்லி, டிச.20- உச்ச நீதிமன்றத்தில் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் சிலை நிறுவ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் முதல் சட்ட அமைச்சர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கரின் சிலை உச்சநீதி மன்றத்தில் நிறுவப் படவில்லை என்பதை சுட்டிக் காட்டிய நீதிக்கான டாக்டர். அம்பேத்கர் வழக்கறிஞர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம் மனு அளித்தனர். 2014ஆம் ஆண்டிலேயே அம்பேத்கரின் உருவப் படத்தை உச்சநீதிமன்றத்தில் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, வழக்கறிஞர் சங்க நூலகத்தில் உருவப்படம் நிறுவப்பட்டது. இந்நிலையில் சிலையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுப்பப்படுவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.