புதுதில்லி, அக்.1- 2014 செப்டம்பர் 25 அன்று, மிகப் பெரிய பெருமிதத்துடன் ‘ மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறி வித்தார். மோடி அரசின் முன்னோடி திட்டமான அது பத்தாவது ஆண்டை எட்டியிருக்கிறது. சான்றி தழ் வழங்குவது, ரயிலுக்குக் கொடி அசைப்பது போன்றவற்றையே மிகப்பெரிய அளவிலான விளம்பர ங்களுடன் கொண்டாடுகிற பிரத மர் நரேந்திர மோடி, வாயை இறுக்க மூடிக்கொண்டு இந்தப் பத்தா மாண்டு தொடக்கத்தைக் கடந்திருக் கிறார். வெற்று விளம்பரங்களால் மூடி மறைக்க முடியாத அள வுக்கு உற்பத்தித்துறையில் ஏற்பட்டி ருக்கிற மிகப்பெரிய வீழ்ச்சிதான் இந்த அமைதிக்குக் காரணமாக இருக்கிறது.
மோடி அறிவித்த மூன்று இலக்குகள் என்னாயிற்று?
உற்பத்தித்துறையின் வளர்ச்சி யை ஆண்டுக்கு 12-14 சதவீதமாக உயர்த்துவது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை 2022க்குள் 25 சதவீதமாக உயர்த்து வது, 2022-க்குள் உற்பத்தித் துறையில் 10 கோடி வேலைவாய்ப்பு களை உருவாக்குவது என்ற மூன்று இலக்குகளை முன் வைத்துத்தான் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இவை அனைத்திலும் தோல்வியடைந்துள் ளதை, வயர் இதழின் கட்டுரை யைச் சுட்டிக்காட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் ட்வீட் செய்திருக்கிறார். முதல் இலக்கான ஆண்டு க்கு 12-14 சதவீதம் உற்பத்தித் துறை வளர்ச்சி என்பதில், 2013-14இ லிருந்து சராசரியாக 5.9 சதவீதம் தான் அடைய முடிந்துள்ளது. 2012-13இல் 17.2 சதவீதமாக இருந்த, ஜிடிபி-யில் உற்பத்தித்துறையின் பங்கை, 2022க்குள் 25 சதவீதமாக உயர்த்துவது என்ற இலக்கு 2022-23இல் 16.4 சதவீதம் என்று தேய்ந்திருக்கிறது. உற்பத்தித் துறையின் வேலைவாய்ப்போ கழு தை தேய்ந்து கட்டெறும்பான கதை யாக, 2016-21 ஐந்தாண்டுகளில் மட்டும் பாதியாகக் குறைந்திருக்கி றது. இலக்குகளில் ஒன்றைக்கூட அடையவில்லை என்பது மட்டு மல்ல, பின்னோக்கிப் பயணித்திருக் கிறோம் என்பதுதான் எதார்த்த நிலையாக உள்ளது. பிறகு எப்படிக் கொண்டாடுவது? ‘தி அன்மேக்கிங் ஆஃப் மேக் இன் இந்தியா’ என்ற ப்ளூம்பெர்க் ஏட்டின் கட்டுரையின் தலைப்பே, திட்டத்தின் தோல்வியை ஒற்றை வரியில் பறைசாற்றிவிடுகிறது. ஆனால், ஆப்பிள் மொபைல்களின் தயாரிப்பு இந்தியாவில் மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது; மொத்த ஆப்பிள் மொபைல்களில் 7 சதவீதம் தற்போது இந்தியாவில் உற்பத்தியாகின்றன, இது வளர்ச்சியில்லையா என்கிறார்கள். பையன் 100க்கு 13 மார்க் வாங்கி ஃபெயில் ஆகிவிட்டான் என்று சுட்டிக்காட்டினால், ஒரு 10 மார்க் கேள்விக்கு சரியாக பதில் எழுதி யிருக்கிறான், அதைப் பாராட்டாமல் குறை சொல்கிறீர்களே என்பதைப் போல இது இருக்கிறது.
தொழில்துறை: வெறும் 2.9 சதவீதம்
பல துறைகளிலும் உள்ள நிலை மையைக் குறிக்கும் தொழில்துறை உற்பத்திக் குறியீடு உண்மை நிலை யைத் தெளிவாக விளக்குகிறது. ஆண்டுக்கு 7-8 சதவீதமாவது தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி இருக்க வேண்டும் என்கிற நிலை யில், 2013-14இலிருந்து 2022-23 காலகட்டத்திற்கான சராசரி வளர்ச்சி வெறும் 2.9 சதவீதமாக இருக்கிறது. இது, பாஜக ஆட்சியாளர்கள் பெரு மையாகக் குறிப்பிடுகிற ஆப்பிள் போன் உற்பத்தியையும் சேர்த்துத் தான் எனும்போது, மற்றவற்றில் இன்னும் மோசமான சரிவு ஏற்பட்டி ருக்கிறது என்பதும் வெளிப்படு கிறது. உண்மையில் இந்த மாதா ந்தரக் குறியீடு பல மாதங்களில் எதிர்மறையாக இருக்கிறது என்பது, வளர்ச்சிக்குப் பதிலாக வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை விளக்குகிறது. மின்சாரக் கருவிகளின் உற்பத்தி வளர்ச்சி 2013-14இலிருந்து தற்போது வரை சராசரியாக (-)1.8 சதவீதமாக சரிவைச் சந்தித்துள் ளது. கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக், ஒளியியல் கருவிகளின் உற்பத்தி சராசரியாக வெறும் 2 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. போக்குவரத்துக் கருவிகள் உற் பத்தித்துறை சராசரியாக வெறும் 2.3 சதவீதமும், மோட்டார் வாகன உற்பத்தி சராசரியாக வெறும் 1.6 சதவீதமும் மட்டுமே வளர்ந்திருக் கின்றன. அதிக வேலை வாய்ப்பு களை உருவாக்கக்கூடிய துறைகளான துணி உற்பத்தி (-)0.5 சதவீத மும், ஆடையலங்காரப் பொருட்கள் துறை 1.2 சதவீதமும், தோல் பொருட் கள் துறை (-)1.8 சதவீதமும் என்ற அள வுக்குத்தான் வளர்ந்து(தேய்ந்து!) உள்ளன.
வேலையின்றித் தவிக்கும் 42.3% பட்டதாரிகள்
இப்படியான மோசமான வளர்ச்சி யால், உண்மையில் வளர்ச்சி என்று சொல்ல முடியாத அளவுக்குப் பல துறைகளிலும் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி யால், பட்டம் பெற்றவர்களில் 42.3 சத வீதம் பேர் வேலையின்றித் தவிப்பதாக ‘ஸ்டேட் ஆஃப் ஒர்க்கிங் இந்தியா 2023’ அறிக்கை குறிப்பிடுகிறது. இங்கொன்றும், அங்கொன்று மாகத் தொழிற்சாலைகள் தொடங் கப்படுவது என்பது உண்மையில் வளர்ச்சியோ, வெற்றியோ அல்ல என்பதை, ‘ஆனுவல் சர்வே ஆஃப் இண்டஸ்ட்ரீஸ்’ வெளிப்படுத்துகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்தியா முழுவதும் சுமார் ஒரு லட்சம் தொழிற்சாலைகள் தொடங் கப்பட்டதாகவும், தற்போதைய ஆட்சி யில் இது வெறும் 22 ஆயிரம் மட்டும் தான் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தொழிற்சாலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஐக் கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 6.2 சதவீதம் வளர்ச்சியடைந்த நிலை யிலிருந்து, இந்த ஆட்சியில் வெறும் 2.8 சதவீத வளர்ச்சி என்ற நிலைக்குச் சரிந்திருக்கிறது. அதைப்போலவே தொழிலாளர்களின் ஊதியம் ஐமுகூ ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு 17.1 சதவீதம் உயர்ந்தது. ஆனால், 2014க்குப்பின் அது 8.4 சதவீதமாகத் தேய்ந்திருக்கிறது.
கூட்டுக் களவாணிகளுக்கு மட்டுமே லாபம்
அப்படியென்றால் தொழிற்சாலை கள் ஈட்டுகிற லாபம் உயர்ந்துவிட் டதா என்றால் அதுவும் இல்லை. சராசரி யாக ஆண்டுக்கு 18.9 சதவீத வளர்ச்சி யை ஐமுகூ ஆட்சியில் அடைந்த தொழிற்சாலைகளின் லாபம், இந்த ஆட்சியில் வெறும் 0.6 வளர்ச்சியை மட்டுமே எட்ட முடிந்திருக்கிறது. அதா வது, கூட்டுக் களவாணிகளான அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும் பல்களைத் தவிர எந்தத் தரப்புக்குமே இந்த ஆட்சி நலம் பயக்கவில்லை என்பதுதான் மறைக்க முடியாத அள வுக்கு வெளிப்படத் தொடங்கியிருக்கி றது. அதிகத் தொழிற்சாலைகள் தொடங்கப்பட; அதிகத் தொழிலா ளர்கள் பணியமர்த்தப்பட கொள்கை களைத் திட்டமிடாமல், பணிகளைத் தொடங்காமல், வெறும் வெற்று விளம் பரம் எவ்வளவு தோல்வியாக முடியும் என்பதற்கான நடைமுறை உதாரண மாக ‘மேக் இன் இந்தியா’ மாறியி ருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல; அதனால்தான், மொத்த மூலதன உருவாக்கம் என்பது சராசரியாக 21.3 சதவீதமாக ஐமுகூ ஆட்சியில் இருந்த நிலை, தேஜகூ ஆட்சியில் (-)0.7 சத வீதம் என்ற மோசமான நிலையை அடைந்திருக்கிறது. தொழில்துறை யில் முதலீடுகள் குறைவது என்பது, அரசின் கொள்கைகள் மீதான நம்பிக் கையின்மையின் வெளிப்பாடே அன்றி வேறல்ல.