states

முந்தைய கணிப்பையே உறுதிசெய்தது உலக வங்கி இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3 சதவிகிதமாக இருக்கும்!

புதுதில்லி, ஜன. 13 - இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளை, பல்வேறு தர மதிப்பீட்டு நிறுவனங்கள் மாற்றி அமைத்துவரும் நிலையில், உலக வங்கி, தனது முந்தைய நிலையையே மீண்டும் உறுதி செய்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி (GDP), நடப்பு 2021-22 நிதியாண்டில் 8.3 சதவிகிதமாக இருக்கும் என, கடந்த ஜூலையில் அறிவித்திருந்த நிலையில், ஜனவரியிலும் அதே நிலையே நீடிப்பதாக உலக வங்கி கூறியுள்ளது. கடந்த வாரம், தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO), நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 9.2 சதவிகிதமாக இருக்கும் என கணித்திருந்த நிலையில், உலக வங்கி 8.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. வளர்ச்சி மதிப்பீடு உயராத தற்கு, மீட்சி இன்னும் பரவலாக எட்டப்படவில்லை என்பதையே காரணமாக கூறியுள்ளது. மேலும், அடுத்த 2022-23 நிதியாண்டு மற்றும் அதற்கடுத்த 2023-24 நிதியாண்டுகளில் வளர்ச்சி முறையேக 8.7 மற்றும் 6.8 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இந்தியாவில் தொற்று மற்றும் கட்டுப்பாடுகள் குறைந்ததால், பொருளாதார பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு, கொரோனாவுக்கு முன்பிருந்த நிலை எட்டப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.