states

‘மாநிலங்களின் ஒன்றியமான’ இந்தியாவை ‘ஒன்றிய அரசு’ என குறிப்பிடுவதில் என்ன சிக்கல்?

புதுதில்லி, ஆக. 20 - மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவை, அரசின் அனைத்து உத்தரவுகளிலும், அறிவிப்பிலும் ‘ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக  அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஆத்மாராம் சரோகி. 84 வயதான இவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில்,’ நமது அரசியலமைப்பின் கீழ், இந்தியா என்ற நமது நாடு ‘மாநிலங்களின் ஒன்றியம்’ ஆகும். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த ‘மத்திய அரசாங்கம்’ என்ற இப்போது தொடர முடியாது. எனவே, அனைத்து சட்டங்களிலும் பயன்படுத்தப்படும் ‘மத்திய அரசு’ என்ற சொற்றொடரை ‘ஒன்றிய அரசு’ அல்லது ‘யூனியன் ஆப் இந்தியா’ என்று குறிப்பிட வேண்டும். நமது அரசியலமைப்பின் அனைத்து உத்தரவுகளிலும், அறிவிப்புகளிலும், ‘மத்திய அரசு’ என்பதை ‘ஒன்றியம்’ அல்லது ‘ஒன்றிய அரசு’ என்று மாற்றி அமைக்க  உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,’ இது தேவையற்ற வழக்கு. பொதுநல மனுவாக  இதை ஏற்க முடியாது. எனவே இதை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார். அப்போது நீதிபதிகள்,’ இந்த மனுவில் பொதுநலன் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே ‘மத்திய அரசு’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை இல்லை’ என்று கருத்து தெரிவித்தனர். அதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘இந்திய அர சியலமைப்புச் சட்டம் மத்திய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை. அது எப்போதும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது. பணி யாளர்கள், பொதுக் குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, ‘மத்திய அரசு’ என்பதற்குப் பதிலாக ‘யூனியன் ஆப் இந்தியா’ என்ற  சொற்றொடரைப் பயன்படுத்துவதை ஆய்வு செய்துள்ளது மத்திய அரசு’ என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட சட்டப்பூர்வ மாக பயன்படுத்தப்படவில்லை. அரசியலமைப்பின் 1-ஆவது பிரிவு ‘ஒன்றியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்து கிறது. ‘மத்திய’ என்ற வார்த்தை அதில் இல்லை. அதேபோல்  அரசியல்சாசன பிரிவு 53-இல் ஒன்றிய அரசுக்குத்தான் அதிக அளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 1897 பொது உட்பிரிவு கள் சட்டத்தின் பிரிவு 3(8)(பி)ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ‘மத்திய அரசு’ என்பதன் வரையறை அரசியல் சாசனத்திற்கு எதிரானது’ என்று வாதிட்டார்.  அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கை யை நிராகரித்து விட்டனர்.  அத்துடன் ஆத்மாராம் சரோகியின் பொதுநல மனுவுக்கு பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை டிசம்பம் 5-ஆம் தேதி ஒத்திவைத்தனர்.