states

img

ஒரே மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 27.14 பில்லியன் டாலராக அதிகரிப்பு

மும்பை இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி நிலவரம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் வெறும் 1% வளர்ச்சியைக் கண்ட பொருட்கள் ஏற்றுமதி, அக்டோபர் மாதத்தில் 17.25% உயர்ந்து 39.2 பில்லியன் (பில்லியன் = 100 கோடி )டாலர் அளவை எட்டியுள்ளது. இது நடப்பு ஆண்டின் இரண்டாவது உயர்ந்த புள்ளிவிவரம் ஆகும். ஆனால், கவலை அளிக்கும் விதமாக, நாட்டின் இறக்குமதி செலவு வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் இறக்குமதி மதிப்பு 3.9% உயர்ந்து 66.34 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தின் சாதனை புள்ளிவிவரமான 64.34 பில்லியன் டாலரை முறியடித்துள்ளது. குறிப்பாக, பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி மதிப்பு கடந்த ஆண்டை விட 13.3% அதிகரித்து 18.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது முந்தைய மாதத்தின் 12.5 பில்லியன் டாலரை விட 46.4% அதிகமாகும். அதே நேரத்தில், பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 22.1% குறைந்து 4.58 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. இதன் விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறை செப்டம்பர் மாதத்தில் இருந்த 20.8 பில்லியன் டாலரிலிருந்து அக்டோபரில் 27.14 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டின் இரண்டாவது உயர்ந்த பற்றாக்குறையாகும். பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படி, தங்கம் மற்றும் எண்ணெய் இறக்குமதியின் அதிகரிப்பே இந்த உயர்வுக்கு முக்கிய காரணம். தங்க இறக்குமதி கடந்த ஆண்டை விட 1.4% குறைந்திருந்தாலும், செப்டம்பர் மாதத்தை விட 62% அதிகரித்து 7.13 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி நிலைமை கவலை அளிப்பதாக வர்த்தக செயலாளர் சுனில் பர்த்வால் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஐநா வர்த்தகம் மற்றும் மேம்பாடு அமைப்புகளின் கணிப்புகள் இந்த ஆண்டிற்கான வர்த்தக வளர்ச்சி குறித்து பெரும் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளன. மேற்கத்திய நாடுகளில் மந்தநிலை, உலகளாவிய வர்த்தக பாதைகளில் இடையூறுகள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இந்திய ஏற்றுமதியாளர்கள் பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஏற்றுமதியில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 211.3 பில்லியன் டாலர் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. பொறியியல் பொருட்கள், வேதிப்பொருட்கள், மின்னணு சாதனங்கள், அரிசி மற்றும் ஆயத்த ஆடைகள் போன்ற துறைகளில் இரட்டை இலக்க வளர்ச்சி காணப்படுவதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.