states

img

சிபிஎம் உறுப்பினர் மீது கொலைவெறித் தாக்குதல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதா?

கரூர், அக்.15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியக் குழு உறுப்பினர் மீது போதை கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல், அலட்சியமாக இருக்கும் மாயனூர் காவல்துறையை கண்டித்து, குளித்தலை டிஎஸ்பி அலு வலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டம், கிருஷ்ண ராயபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் வி.நாகராஜன். இவர் தனது மகனு டன் அக்.12 அன்று இரவு 9 மணியள வில் கரூரில் இருந்து பழைய ஜெயங்கொண்டததில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது பிச்சம்பட்டி வாய்க்கால் பாலம் அருகே போதைப் பொருட்கள் உட்கொண்டிருந்த உதயநிதி உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல், இவர்களை வழி மறித்து தகராறு செய்து, பீர் பாட்டில் மற்றும் கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளது.  இதில் படுகாயமடைந்த நாக ராஜன், அவருடைய மகன் விக்னேஸ்வர் ஆகியோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில்  சிகிச்சை பெற்று வரு கின்றனர். நாகராஜனுக்கு இரண்டு பற்கள் உடைந்ததோடு, தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது மகனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. 

குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறை

கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் வி.நாகராஜன், அவரது மகன் விக்னேஸ்வர் ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய 6 பேரில் 2 பேரை மட்டுமே காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணமான உதயநிதி மற்றும் மேலும் 3 பேரை மாயனூர் காவல்துறையினர் கைது செய்யாமல் குற்றவாளிகளுக்கு ஆதர வாகவும், இந்த வழக்கில் அலட்சிய மாகவும் செயல்பட்டு வருகின்றனர்.  மேலும் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் பணியில் மாயனூர் காவல்துறையினர் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே உடனடியாக மீதமுள்ள 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். மேலும் தற்போது போடப்பட்டுள்ள வழக்கை மாற்றி பிணையில் வர முடியாமல் (இந்திய தண்டனை சட்டம் 307) கொலை முயற்சி வழக்காக பதிவு செய்ய வேண்டும்; கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் உபயோகம், விநியோகம் மற்றும் சமூக விரோதிகளின் அட்டூழியம் அதிகளவில் இருப்பதால், கரூர் மாவட்ட காவல்துறை, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பிச்சம்பட்டி பகுதியில், ரோந்துப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்சியின் கரூர் மாவட்டக்குழு சார்பில் குளித்தலை சுங்ககேட்டிலிருந்து பேரணியாக சென்று, குளித்தலை டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல்வன் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் ஒன்றி யச் செயலாளர் எம்.தர்மலிங்கம் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராஜூ, கே.சக்திவேல், தோகை மலை ஒன்றியச் செயலாளர் சுப்பிர மணியன், பழைய ஜெயங்கொண்டம் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் குளித்தலை டிஎஸ்பி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், நான்கு குற்றவாளி களையும் இரண்டு நாட்களுக்குள் கைது செய்வதாகவும், இதை கொலை முயற்சி வழக்காக பதிவு செய்வதாகவும் தெரிவித்தனர்.