states

காவிரி வழக்குகளை விசாரிக்க புதிய அமர்வு!

புதுதில்லி, ஆக. 21 - காவிரி வழக்கை விசாரிப்ப தற்கு, 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு உடனடியாக அமைக்கப் படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.  காவிரி நீரை கர்நாடக அரசு முறை யாக பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறி, தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 14  அன்று மனுத் தாக்கல் செய்தது. திங்களன்று இந்த மனு விசார ணைக்கு வந்தபோது, காவிரியில் கூடுதல் நீர் திறந்துவிடக் கோரும் தங்களின் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி முறையிட்டார்.   இதனை ஏற்றுக்கொண்டே, காவிரி வழக்கை விசாரிக்க, இன்றே  3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு  உருவாக்கப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உறுதி யளித்தார்.  

காவிரி நீரைப் பங்கீடு செய்து கொள்வதில், கர்நாடக அரசுக்கும் தமிழ்நாடு  அரசுக்கும் நீண்ட ஆண்டு களாக சிக்கல் இருந்து வருகிறது.  அந்த வகையில் 2023 ஜூன் முதல்  ஆகஸ்ட் 11 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 53.77 டிஎம்சி  தண்ணீரை கர்நாடகம் வழங்கி யிருக்க வேண்டும். ஆனால், 15.79 டி.எம்.சி. தண்ணீரைத்தான் கர்நாடகா அரசு வழங்கியுள்ளது. 37.97 டி.எம்.சி தண்ணீரை தர வில்லை. இதையடுத்து, காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் 14 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி  தலைமை நீதிபதி அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், காவிரி வழக்கை விசாரிக்க இன்றே  3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

உபரி நீர் மட்டுமே வருகிறது!

காவிரி ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், காவிரி நீரை எந்தவொரு மாநிலமும் சொந்தம் கொண்டாட உரிமை இல்லை என்று கூறியதுடன், 1892 மற்றும் 1924 ஆகிய  ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும்; தமிழ்நாட்டின் அனுமதி யின்றி கர்நாடகா புதிய அணைகள் கட்டக் கூடாது என்று உத்தரவிட்டது. அத்துடன், தமிழ்நாட்டிற்கு  177.25, கேரளத்திற்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்று தண்ணீரை  பகிர்ந்தளித்த காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை; இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று கூறியதுடன், நதிநீர் பங்கீட்டைக் கண்காணிக்க, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கவும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டது. இந்தக்  காவிரி மேலாண்மை ஆணையமும், தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி விகிதம்  38 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விடுமாறு கடந்த வாரம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. எனினும் உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இதையடுத்தே கடந்த ஆகஸ்ட் 14 அன்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.