ஜனவரி 23 வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜன. 20 - தமிழ்நாட்டில் ஜனவரி 23 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் தமிழகத்தில் ஜனவரி 21 முதல் 23 வரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மும்மொழியில் அறிவிப்பா? : அரசு மறுப்பு
சென்னை, ஜன. 20 - தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் டாஸ்மாக் மதுபான கடைக்கான அறிவிப்பு பலகை மும்மொழியில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ‘ஒரு வழியாக தமிழகம் மும்மொழி கொள்கையை டாஸ்மாக்கில் அறிமுகம் செய்துள்ளதாக’ கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இது பழைய புகைப்படம் மற்றும் அகற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஆண்டு புதிதாக மதுக்கூடம் (பார்) ஆரம்பிக்கப் பட்ட சமயத்தில் அந்த பலகை ‘பார்’ உரிம தாரரால் வைக்கப்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் நடவடிக்கை மேற்கொண்டு பலகை அகற்றப்பட்டது. தற்போது எந்த ‘போர்டும்’ அந்த இடத்தில் இல்லை. பழைய புகைப்படம் தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் - மாணவர் விவரங்களை பதிவேற்ற பிப்.17 கடைசி நாள்!
சென்னை, ஜன. 20 - ஒன்றிய அரசின் இணையதளத்தில் பள்ளி மாணவர் - ஆசிரியர் விவரங்களை பிப்ரவரி 17-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பள்ளிகள் சார்ந்த தரவும், மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை U.D.I.S.E. இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், அதற்கேற்ப ஒரு பள்ளியில் இருந்து விலகி, மற்றொரு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து முடித்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு: விண்ணப்பப் பதிவு தேதிகள் அறிவிப்பு!
சென்னை, ஜன. 20 - தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் ‘டான்செட்’ மற்றும் ‘சீட்டா’ நுழைவுத் தோ்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜன. 24 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெற வேண்டும். அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான ‘டான்செட்’ தோ்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 22 அன்று தோ்வுகள் நடைபெற உள்ளன. முதுநிலை எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கு தமிழ்நாட்டில் நடத்தப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு (சீட்டா) மார்ச் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 24 முதல் தொடங்கவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 21 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களும் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை www.tancet.annauniv.edu இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
ஜகபர் அலி படுகொலைக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை, ஜன. 20 - சமூக ஆர்வலர் ஜகபர் அலி படு கொலை செய்யப்பட்டதற்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹி ருல்லா எம்எல்ஏ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “புதுக் கோட்டை மாவட்டம் திருமயம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதை தடுப்பதற்கு பெரும் முயற்சி மேற் கொண்டவர். கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கனிமவளம் கொள்ளை போவ தற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக சமூக விரோதிகள் அவர் மீது லாரியை ஏற்றிப் படுகொலை செய்துள்ளனர். தொடர்ச்சியாகப் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் மெத்தனப் போக்குதான் இந்த படுகொலைக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
“எச்எம்பிவி தொற்றுக்கு சிகிச்சை தேவையில்லை!”
சென்னை, ஜன. 20 - எச்எம்பிவி வைரஸ் தொற்று ஏற்பட்டால் 3 அல்லது 4 நாட்களில் தானாகவே சரியாகி விடும் என்ப தால், அந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையும், மருத்துவமும் தேவை இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார். சென்னையில் செய்தியாளர் களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகை யில், “எச்எம்பிவி வைரஸ் தொற்று ஏற்பட்டால் 3 அல்லது 4 நாட்களில் தானாகவே சரியாகி விடும். அந்த வைரஸ் தொற்றுக்கு என பிரத்யேகமாக மருந்துகள் மற்றும் தனி வார்டுகள் தேவை இல்லை. மேலும், சிகிச்சையும், மருத்துவம் தேவை இல்லை, அது மிக கட்டுக்குள் இருக்கிறது. அதுகுறித்து பதற்றப்படத் தேவையில்லை. இதுபோன்ற வைரஸ்களை தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதி கரிக்க உடற்பயிற்சி அவசியம். நல்ல உணவுப் பழக்கங்களை கொண்டு வருவது, தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிப்பது பொதுவாக எல்லோருக்கும் நல்லது!” என்றார்.
‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் 12.8 லட்சம் மனுக்களுக்கு தீர்வு
சென்னை, ஜன. 20 - அரசின் சேவைகளை மக்களி டம் கொண்டு சேர்க்கும் ‘மக்களு டன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு கண்டு தமி ழக அரசு சாதனை படைத்துள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள் ளார். “அரசின் சேவைகளைப் பெற மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நிலையில் இருந்து அர சின் சேவைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் தொலை நோக்கு திட்டமான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 15 அரசுத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற 44 அடிப்படை பொதுச் சேவைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்க ளிடமிருந்து மனுக்களைப் பெற்ற 30 நாட்களுக்குள் அரசின் முக்கி யச் சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது. இதுதொடங்கப்பட்டு முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு, 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுத் தீர்வு காணப்பட்டன. நகர்ப்புற மக்களிடையே இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஊர கப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை 2,344 முகாம்கள் மூலம் 12 ஆயி ரத்து 525 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. இந்த முகாம்களின் மூலம் இதுவரை மக்களிடமிருந்து பெறப்பட்ட 12.80 லட்சம் மனுக் களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.