states

img

தீக்கதிரும் சூரியக்கதிரும் மானுடத் தேவைகள்

மணிவிழாக் காணும் தீக்கதிரை அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறேன். 1963 ஆம் ஆண்டு  தீக்கதிர்   எந்தத்  தணலை ஏற்படுத்தியதோ அந்தத் தணலின் வெப்பம் கொஞ்சம்கூடக் குறையாமல்  ஒளிவீசிக் கொண்டி ருக்கிறது தீக்கதிர். வணிகப் பத்திரிகைகளுக்கு ஒரு வசதியுண்டு. காலத்திற்கேற்பத் தங்கள் அகத்தையும் முகத்தையும் மாற்றிக் கொள்ளலாம். அவற்றுக்கு  எண்ணிக்கை முக்கியம். மற்றும் இருத்தல் முக்கியம். ஆனால் தீக்கதிர் போன்ற லட்சிய ஏடுகளுக்கு எண்ணம்தான் முக்கியம். இடதுசாரிச் சிந்தனைகளிலிருந்து சிறிதளவும் இடறிவிடாமல் தடம் மாறாமல் பயணிப்பதில் அன்றாடச் சிக்கல்கள் ஆயிரமுண்டு. இடர் வரும்; அதை எதிர்கொள்ள வேண்டும் மற்றும்  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற திடமும் திராணியும் வாய்த்திருந்தால்தான் ஒரு நீடித்த லட்சியம்  நிலை பெற முடியும். அந்த உறுதிப்பாட்டோடு தீக்கதிர்  இன்னும் தீராச் சுடரோடு திகழக் காரணம் அது  உழைப்பாளிகளின் வியர்வை விற்ற காசில் உருவானது என்பதை மறவாமல் இருப்பதுதான். 

இயக்கத்திற்குத் தீக்கதிர் துணையா - தீக்கதிருக்கு இயக்கம் துணையா -  என்பது இரண்டுக்கும் பெருமை தருகிற ஒரு கேள்வி. இயக்கம் தோன்றிய பின்புதான் தீக்கதிர் தோன்றியது என்பது பேருண்மை. ஆனால் பல  நேரங்களில் இயக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள்கூடத் தீக்கதிரை ஏற்றுக் கொண்டு சிந்தை தெளிகிறார்கள். இயக்கத்தின் வட்டத்துக்குள் மட்டும் இயங்காமல் தமிழ்நாட்டு அரசியலையே இயக்குவதிலும் தீக்கதிர் தன் கணிச மான பங்கை வழங்கி வந்திருக்கிறது; வருகிறது. முத்தமிழறிஞர்  கலைஞரோடு நான் பழகிவந்த  காலங்களில் அவர் கேட்கும் முக்கியமான ஊடகக் கேள்விகள் மூன்று: “முரசொலி படித்தாயா? விடுதலை படித்தாயா? தீக்கதிர் வாசித்தாயா?” வார இதழாகப் பிறந்த தீக்கதிர் நாளிதழாக வளர்ந்த பிறகு உற்ற பேரிடர்களாயிரம். நெருக்கடி நிலையின்போது தணிக்கைக்குள்ளாக்கப்பட்ட பத்திரிகைகள் பட்டபாடுகள் பலப்பல. அவற்றுள் தீக்கதிரும்  ஒன்று. எழுதித் தந்த தலை யங்கத்தில் பல சொற்களை அடித்துக் கொண்டே வந்த தணிக்கை அதிகாரி, “வேண்டாம்; இந்தத் தலையங்கம் இல்லாமல் பத்திரிகை வெளியிடுங்கள் என்று கழுத்தைப் பிடித்தவர் குரல்வளை யை நெரித்திருக்கிறார். சரி; தலை யங்கப் பகுதியில் ஓரு கேள்விக்குறி  மட்டும் அச்சிட்டுக் கொள்ளலாமா  என்று கேட்டதற்கு அதுவும் நிராகரிக்கப்பட்டி ருக்கிறது.  இப்படிப்பட்ட தீ ஆறுகளைத் தாண்டித் தான் தீக்கதிர் பரவிக் கொண்டேயிருக்கிறது.

அரசியல் முடிவுகள்  - செய்திக்குப் பின்னால்  இருக்கும் செய்திகள் – உழைக்கும் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணங்கள் – எதிரிக்கு எச்சரிக்கைகள் – நம்மவர்க்கு நம்பிக்கை கள் – நமது வாளைத் தீட்டிக் கொடுக்கும் வலிமை – எதிரிகளின் வெடிமருந்துகளுக்குத் தண்ணீர் காட்டும் திறமை – இவையெல்லாம் தீக்கதிரின் ஆழங்கள்; மற்றும் அடையாளங்கள்.  தொடக்க நாளிலிருந்து தீக்கதிரை ஏந்திப் பிடித்த தோழர்கள் , ஆசிரியர் குழுவைச் சார்ந்த அறிவுஜீவிகள், நாட்டைச் சிவப்பாக்குவதற்காகக்  கைகளைக் கறுப்பாக்கிக் கொண்ட அச்சுக் கோப்புத் தொழிலாளர்கள், பத்திரிகையை விநியோகிக்கும் தோழர்கள் , வாசகர்கள் அனை வரையும் நான் பெருமையோடு நினைவு கூர்கிறேன்.

தீக்கதிரோடு இயங்கிய – இயங்கும் தோழர்கள் யாருக்கும் சுயநலம் என்பது இல்லை.  அல்லது மிக மிகக் குறைவு என்பதை நான் உறுதிபடக் கூறுவேன்.  மணிவிழாக் காணும் தீக்கதிர் நூற்றாண்டு காண வேண்டும்; காணும். வானத்தில் சூரியக் கதிரும் பூமியில் தீக் கதிரும் மானுடத் தேவைகள். தீக்கதிருக்கு என் அறிவு வணக்கம்.

;