states

தீக்கதிர் விரைவு செய்திகள்

விலைவாசி மந்திரத்தால் உயர்ந்ததாக நிதியமைச்சர் நினைக்கிறார்

“ஆங்கில நாளேடு ஒன்றில் விலைவாசி உயர்வு பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு நிதி  அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் பதில் கூறவில்லை. நிகழ்காலத்தைப் பற்றி  பேசுவதை விட வரலாற்றை ஆய்வு செய்வதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிக அக்கறை  காட்டுபவராக உள்ளார். பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு எடுக்கும் நடவடிக்கைகள குறித்தும் நாடாளுமன்ற உரையில் நிதி அமைச்சர் விளக்கம் அளிக்கவில்லை. விலையேற்றம் மந்திரத்தால் நிகழ்ந்தது என்றும், மந்திரம் போன்று இறங்கிவிடும் எனவும் மத்திய அரசு நினைக்கிறது” என என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

ம.பி. மாநிலத்தில் மின்னல் தாக்கி 9 பேர் பலி!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே இடி, மின்னலுடன் கூடிய பலத்த  மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் விதிஷா மாவட்டத்தில் 4 பேர், சத்னா மாவட்டத்தில் 4 பேர், குணா மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 9 பேர் மின்னல்  தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 12 மற்றும் 16 வயதுச் சிறுவர்கள் 2 பேரும் காயமடைந்துள்ள னர். இதனிடையே, ம.பி. மாநிலத்தில் திங்கட்கிழமை முதல் மேலும் மூன்று நாட்களுக்கு கனமழை  முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஹரியானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது!

ஹரியானா மாநிலம், கராவர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ரயில்  ஒன்று திடீரென ஞாயிறன்று தடம் புரண்டது. இதில், ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில்  இருந்து கீழே இறங்கின. தில்லியின் ஷகுர் பஸ்தி நகரில் இருந்து ரோத்தக் வழியே சூரத்கார்  நோக்கி இந்த சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த சரக்கு ரயில் விபத்தில் சிக்கி யது. ரயிலில் நிலக்கரி ஏற்றப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

மூணாறு பகுதியில் நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு!

கேரளத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்  பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மரங்கள் சரிந்து விழுவதாலும், நிலச்சரிவு காரணமாக வும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூணாறு அருகில் பூப்பாறையில் இருந்து மூணாறு செல்லும் பாதையில் உள்ள கேம்ப் ரோட் பகுதியில் தேசிய  நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மூணாறு செல்லும் பாதை தடைப்பட்டுள்ளது. மூணாறு பகுதியில் மேலும் நிலச்சரிவுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதால் பொதுமக்க ளும், சுற்றுலா பயணிகளும் கவனமாக இருக்கும்படி கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

கோமியத்திற்கு வேண்டுமானால் 50% ஜிஎஸ்டி விதியுங்கள்

“சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக இருக்கக் கூடிய பால், தயிர்  போன்ற பொருட்களின் மீது 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள  முடியாதது. ஆனால், நரேந்திர அரசு, குறிப்பிட்ட ஒரு பொருளின் மீது ஜிஎஸ்டி வரியை 50 சதவிகி தம் கூட ஏற்றிக் கொள்ளலாம். அதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. அந்தப் பொருள் மாட்டுக் கோமியம்” என்று தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில் குமார் மக்களவையில் பேசியுள்ளார்.

பீகார் மாநில நிலத்தடி நீரில் அதிகளவில் யுரேனியம்

பீகாரின் நாளந்தா, நவடா, கதிஹார், மாதேபுரா, வைஷாலி, சுபால், அவுரங்காபாத், கயா, சரண் மற்றும் ஜெகனாபாத் ஆகிய பத்து மாவட்டங்களின் நிலத்தடி நீரில் யுரேனியம் வரை யறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டங்களில் இருந்து 100 நிலத்தடி நீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. யுரேனியம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலத்தடி நீரில் இருந்தால், அதைப் பயன்படுத்தும் மக்களுக்கு தீவிர உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக கிட்னி, எலும்புகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவத்தில் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்த திட்டம்

இந்திய தொலைத்தொடர்புத்துறையில் அக்டோபர் மாதம் முதல் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ராணுவத்திலும் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் பரிந்துரைகளை ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை பரிசீலித்து வருகின்றன. அதனடிப்படையில், 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும்போது, அதை எல்லையில் உள்ள படையினரின் தகவல் தொடர்புக்கு பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

அம்பானி, அதானி இந்திய மக்களுக்காக பாடுபடுகிறார்களாம்!

அம்பானி, அதானி போன்றவர்கள் தேசபக்தி உடையவர்கள்.  அவர்கள் இந்திய மக்களுக்காக பாடுபடுகிறார்கள் என்று இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் கண்டுபிடித்துள்ளார். “அம்பானி, அதானி போன்றவர்கள் தேசபக்தி உடையவர்கள்.  அவர்கள் இந்திய மக்களுக்காக பாடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டு தொழில் முதலீட்டாளர்களை நம் நாட்டுக்குள் விடாமல், அவர்களே இங்கு தொழில் செய்கின்றார்கள். அவர்கள் இந்தியர்களுக்காக பாடுபடுகின்றார்கள். அவர்களிடம் சேரும் பணம் இந்தியர்களிடம் சேரும் பணமாகும்” என்றும் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.









 

 

;