states

img

மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஸ்தாபக தலைவர் தோழர் எஸ்.பஞ்சரத்னம் மறைவு

செங்கொடி தாழ்த்தி சிஐடியு அஞ்சலி

கோயம்புத்தூர். செப். 22 –  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) ஸ்தாபக தலை வர்களில் ஒருவரான தோழர் எஸ்.பஞ்ச ரத்னம் உடல் நலக்குறைவால் கோவை யில் காலமானார்.   அவருக்கு வயது 82. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) உருவானதில் முக்கியப் பங்கு வகித்தவர் தோழர் எஸ்.பஞ்சரத்னம். மின்வாரியத்தில் பணி யாற்றி வந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களின் சட்ட, சமூகப் பாதுகாப்பை பெற்றுத் தந்தவர். மின் ஊழியர்களின் ஆதர்ச நாயகனாக விளங்கிய தோழர் எஸ்.பஞ்சரத்தினம் தனது இறுதிகாலத்தில் கோவை சாய்பாபா காலனியில் வசித்து வந்தார்.  இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவின் காரணமாக புதன்கிழமையன்று கோவையில் அவரது இல்லத்தில் காலமானார்.  அவரது மறைவு செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மண்டல செயலாளர் மது சூதனன், மாநில துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், மின்வாரிய ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் தலைவர் சின்னசாமி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தோழர் எஸ்.பஞ்சரத்னம் அவர்களின் இணையர் இந்திராணி, மகன் சண்முகம், மகள்  விஜயலட்சுமி உள்ளிட்ட குடும்பத்தின ருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், தோழர் பஞ்சரத்னம் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மின் ஊழி யர் அமைப்பின் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் திரண்டு வந்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

இன்று தகனம்

வியாழனன்று (இன்று) காலை 10 மணிக்கு கோவை பாப்பநாயக்கன் பாளையம் மின்மயானத்தில் தோழரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.  செங்கொடி தாழ்த்தி சிஐடியு அஞ்சலி சிஐடியு மற்றும் மின் ஊழியர் இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் எஸ்.பஞ்சரத்னம் மறைவுக்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மத்திய செயற்குழு, செங்கொடி தாழ்த்தி இதயப்பூர்வமான அஞ்சலியை தெரி வித்துள்ளது.  சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: தோழர் எஸ்.பஞ்சரத்னம் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழுவின் நிர்வாகிகளில் ஒருவராக நீண்டகாலம் பணியாற்றியவரும், சிஐடியு மத்திய செயற்குழுவின் முன்னாள் உறுப்பினருமான தோழர் எஸ்.பஞ்சரத்தினம் அவர்களது  மறைவுச் செய்தி அறிந்து, சிஐடியு தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 82வயதான தோழர் பஞ்சரத்னம் 1970களின் முற்பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டில் மின்சார வாரிய ஊழியராக சிஐடியு-வுடன்  தன்னை இரண்டறப் பிணைத்துக் கொண்டவர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவராக பரிணமித்தவர். சிஐடியுவில் இணைக்கப்பட்ட மிகப்பெரிய அமைப்பு இது. மின்ஊழியர் மத்திய அமைப் பின் பொதுச் செயலாளர் என்ற முறையில், மாநில மின்சார  வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்வதில் பிரமிக்கத்தக்க எழுச்சியை உருவாக்கியவர்; அதன் விளைவாக 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழி லாளர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத் தக்கது. தோழர் பஞ்சரத்னம் அவர்களது மறைவுக்கு சிஐடியு தனது செங்கொடியை தாழ்த்தி மரியாதை செலுத்துகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நமது தோழர் களுக்கும் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 

தோழர் எஸ்.பஞ்சரத்னம் புகழ் நீடுழி வாழ்க!
இவ்வாறு தபன்சென் கூறியுள்ளார்.

சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு அஞ்சலி 

சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப்  பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில், தோழர் எஸ்.பஞ்சரத்தினம் அவர்கள் சிஐடியு அகில இந்திய செயற்குழு உறுப்பின ராகவும், சிஐடியு தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும், மின் ஊழியர் மத்திய அமைப்பின் செயலாளராகவும், தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினராகவும், மின்வாரிய ஓய்வுபெற்ற ஊழியர் நல அமைப்பின் துணைத்தலைவராகவும் பல பொறுப்புகளில் இருந்து திறம்படச் செயலாற்றியவர். தனது வாழ்நாள் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக அர்ப்பணித்த தோழரின் மறைவு தமிழக தொழிலாளி வர்க்கத்திற்கு பேரிழப்பாகும். தோழரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழக தொழிலாளிகளுக்கும் சிஐடியு மாநிலக்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் உரித்தாக்குகிறது. தோழர் பஞ்சரத்தினம் மறைவுக்கு செங்கொடியை தாழ்த்தி சிஐடியு மாவட்டக்குழுக்கள் அஞ்சலி செலுத்துமாறு சிஐடியு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளனர்.  தோழர் பஞ்சரத்தினம் மறைவுச் செய்தி அறிந்து சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


 

;